420மலை.. அண்ணாமலையை தாக்கிய நிர்மல்.. கொக்கி போட்டு தூக்கிய எடப்பாடி.. பாஜகவிற்கு அனுப்பிய மெசேஜ்?
பாஜக தலைவர் அண்ணாமலையை நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் தீவிரமாக செயலாற்றி வந்த அதன் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் நிர்மல் குமார், கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். அந்த கட்சியின் ஐடி விங்கை தமிழ்நாட்டில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
கடந்த இரண்டு வருடங்களில் பாஜக சமூக வலைத்தளங்களில் புதிய உயரத்தை தொட இவரும் காரணமாக இருந்தார். இந்த நிலையில்தான் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளார். என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம். விடைபெறுகிறேன், என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அறிக்கை
அதோடு பாஜக தலைவர் அண்ணாமலையை நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் அவரின் தலைமை குறித்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். நிர்மல் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

அறிக்கை
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.

திராவிட மாடல்
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்,

எடப்பாடி
நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இவர் அதிமுகவில் இணைந்தார். இதில் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், அண்ணாமலையை கடுமையாக தாக்கிவிட்டு பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவுடன் இணைந்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் அதிமுகவில் வலுவான தலைமை இல்லாததால் அதிமுக நிர்வாகிகளைத்தான் பாஜக தட்டி தூக்கும், அதிமுகவை பாஜக கரைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே பாஜகவின் முக்கிய முகத்தை தூக்கி பாஜகவை அதிமுக கரைத்து உள்ளது. கூட்டணியில் இருந்தே எடப்பாடி ஆளை தூக்கி இருக்கிறார் என்பதை தாண்டி, கூட்டணி கட்சி தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்த நிர்மலை கட்சியில் இணைத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது பாஜகவுக்கு அதிமுக கொடுக்கும் மற்றும் ஒரு மெசேஜாக பார்க்கப்படுகிறது.

சேர்ப்போம்
அதாவது நீங்கள் தனி, நாங்கள் தனி. எங்கள் கட்சியை உங்களால் உடைக்க முடியாது. நாங்கள் உங்கள் கட்சியில் இருந்தே ஆட்களை எடுப்போம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது அதிமுக. அதிமுகவை பாஜக கரைக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், .. பாஜகவ அதிமுக கரைத்துக் கொண்டு இருப்பதை காட்டி உள்ளார். பாஜகவிற்கு இது மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. நிர்மல் குமார் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படுவார். இதனால் அதிமுகவின் ஐடி விங்கிற்கு பெரிய பூஸ்ட் கிடைக்கும். முக்கியமாக அதிமுக ஐடி விங் தலைவராக இவர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதிமுக தற்போது பாஜகவில் இருந்தே ஒருவரை தட்டி தூக்கி இருப்பது பாஜக நிர்வாகிகளை அப்செட் ஆகி உள்ளது. கட்சியை விட்டு வெளியேறிய நிர்மல் குமாரை அண்ணாமலை விமர்சனம் செய்யவில்லை. மாறாக வாழ்த்துக்கங்கள் என்று மட்டும் கூறிவிட்டு வழியனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications