சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!
சென்னை: ஒரு காலத்தில் விவசாய பூமியாகவும், அமைதியான புறநகர் பகுதியாகவும் இருந்த ஸ்ரீபெரும்புதூர், இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே தாங்கிப் பிடிக்கும் ஒரு மகா சக்தியாக உருவெடுத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் தமிழகம் 11.2% என்ற அதிரடி வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதற்குப் பின்னால், இந்தத் தொழிற்பேட்டையின் உழைப்பு அளப்பரியது.

வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 'மெகா' ஹப்!
சாம்சங், பாக்ஸ்கான், டெல் என உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் அணிவகுக்கும் ஸ்ரீபெரும்புதூர், வெறும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி மட்டுமல்ல; அது லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார மையப்புள்ளி. சுமார் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ள இந்த மண்டலம், தற்போது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது.
வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாடு, முறையான ஊதியம் மற்றும் நீண்டகால முதலீடு ஆகிய மூன்றும் இணைந்தால் ஒரு பிராந்தியம் எப்படி மாறும் என்பதற்கு ஸ்ரீபெரும்புதூரே சாட்சி. குறிப்பாக, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஆரம்பக்காலத்திலேயே இங்கு செய்த முதலீடுகள், ஒரு பிராந்தியத்தின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளன.
ஊதியமும் நலத்திட்டமும்: ஒரு முன்னோடி
தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, ஹூண்டாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் இங்கு கொண்டு வந்த ஊதிய முறைகளும், தொழிலாளர் நலத்திட்டங்களும்தான் ஒட்டுமொத்த 'ஈக்கோ சிஸ்டத்தையும்' மாற்றியமைத்துள்ளன. இது மற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டை (Benchmark) உருவாக்கியுள்ளது.
இதனால் ஏற்பட்ட மாற்றங்கள் இதோ:
உள்ளூர் வருமானம் உயர்வு: வெளியூர்களுக்கு வேலை தேடி அலைந்த இளைஞர்கள், இன்று தங்கள் வீட்டிற்கு அருகிலேயே கௌரவமான வேலையைப் பெறுகின்றனர்.
திறன் மேம்பாடு: சாதாரண வேலைகளிலிருந்து மாறி, அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை உருவாக்கும் அளவுக்குத் தொழிலாளர்களின் திறன் உயர்ந்துள்ளது.
துணைத் தொழில்களின் எழுச்சி: லாஜிஸ்டிக்ஸ், வீட்டுவசதி, சில்லறை வணிகம், உணவகங்கள் என ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றிப் பல கிளைத் தொழில்கள் ஆலமரம் போல் படர்ந்துள்ளன.
இலக்கு $1 டிரில்லியன்!
வெளிநாட்டு முதலீடுகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவீன தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளன. இது தரமான வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, உள்ளூர் நிறுவனங்களும் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வலிமையைத் தந்துள்ளன.
தற்போது இந்திய தேசிய சராசரி வளர்ச்சியை விடத் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 2030-க்குள் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஹப்பாக உருவெடுக்கவும், 2030-31 நிதியாண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் தமிழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சீனாவை முந்துகிறது
சமீபகாலமாக 'உலகின் தொழிற்சாலை' என்றழைக்கப்படும் சீனாவிற்குச் சவால் விடும் வகையில், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஒரு மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக (Electronics Manufacturing Hub) விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில் தொடங்கி, சாம்சங், பாக்ஸ்கான், பெகட்ரான் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி அல்லது தங்கள் முதலீடுகளைப் பரவலாக்க நினைத்தபோது, அவர்களுக்குச் சிறந்த மாற்றாக ஸ்ரீபெரும்புதூர் அமைந்தது.
சீனாவின் 'ப்ளஸ் ஒன்' (China Plus One) கொள்கையைப் பயன்படுத்திக் கொண்ட தமிழகம், இங்குள்ள தேர்ந்தெடுத்த மனித வளம், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் எளிதான அரசு நடைமுறைகள் மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சீனாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தொழிலாளர் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், பல பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரைத் தங்கள் முதன்மை உற்பத்தித் தளமாகத் தேர்ந்தெடுத்துள்ளன. இன்று இங்கிருந்து உற்பத்தியாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் (Global Supply Chain) சீனாவின் ஆதிக்கத்தைச் சுருக்கி, தமிழகத்தை ஒரு வல்லரசாக நிலைநிறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications