மெஜாரிட்டிக்கு பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றியே விஜய்யால் ஆட்சியை நடத்த முடியும்.. எப்படி தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தனி மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இதனால் பிற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவுகளை விஜய்யின் தவெக பெற காய் நகர்த்தி வருகிறது. ஆனால் மெஜாரிட்டிக்கு பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றியே விஜய்யால் ஆட்சியை நடத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அதற்கும் வாய்ப்புள்ளது. அது எப்படி சாத்தியம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். அந்த வகையில் தவெகவிற்கு 10 இடங்கள் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் தான் பிற கட்சிகளின் ஆதரவை கேட்க வேண்டிய நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் திமுகவுக்கு 59 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் அரசியல் எதிரி என்பதால் திமுக ஆதரவு வழங்க வாய்ப்பில்லை. அதிமுகவுக்கு 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுகவின் வெற்றியை தவெக பறித்ததால் அவர்களிடமும் விஜய் ஆதரவு கோர வாய்ப்பு இல்லை. அதேவேளையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸிடம் 5 எம்எல்ஏக்கள், விசிக, 2 கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகளிடம் தலா 2 எம்எல்ஏக்கள், தேமுதிகவின் பிரேமலதா எம்எல்ஏ உள்ளனர்.இதனால் அவர்களிடம் ஆதரவு கோர வாய்ப்புள்ளது.
இதுதவிர அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள பாமகவிடம் 4 எம்எல்ஏக்கள், அமமுகவிடம் ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனர் அவர்ளிடமும் ஆதரவு கோரலாம். பாஜகவிடம் ஒரு எம்எல்ஏ இருந்தாலும் கூட கொள்கை எதிரி என்பதால் விஜய் தயங்கலாம். இதனால் விஜய் எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு மற்ற கட்சியின் எம்எல்ஏக்கள் யாரும் ஆதரவு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்விகளும் பலருக்கும் எழுந்துள்ளது.
உண்மையில் விஜய் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாமல் தற்போதைய தனது கட்சி எம்எல்ஏக்களை வைத்தே ஆட்சியை நடத்தவும் வாய்ப்புள்ளது. உண்மையா? என்றால் உண்மை தான். இது சாத்தியமும் கூட. இதற்கு என்ன செய்ய வண்டும்? இது எப்படி சாத்தியம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அதாவது தற்போது 108 தொகுதிகளில் வென்றதால் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர வேண்டும். தனிப்பெரும் கட்சி என்பதால் ஆளுநரும் அவரை ஆட்சி அமகை்க அழைப்பார். இதையடுத்து விஜய் முதல்வராக பொறுப்பேற்பார். இந்த சமயத்தில் விஜய்க்கு மெஜாரிட்டி இல்லாததால் மெஜாரிட்டியை நிரூபிக்க காலஅவகாசம் கேட்கலாம். இதற்கு 14 முதல் 15 நாட்கள் வரை அதிகபட்சமாக வழங்கப்படும். இந்த காலக்கட்டத்தில் விஜய் பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.
இந்த மெஜாரிட்டி நிரூபிப்பு என்பது நம்பிக்கை வாக்கெடுப்பு முறையில் நடக்கும். தற்போது சட்டசபையில் சபாநாயகர் இல்லை. இதனால் புதிதாக ஒருவர் சபாநாயகராக ஆளுநர் மூலமாக நியமிக்கப்படுவார். பொதுவாக மெஜாரிட்டி இருந்தால் அந்த கட்சியே தற்காலிக சபாநாயகரை நியமிக்கும்.
ஆனால் தற்போது விஜய்க்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் ஆளுநரே சபாநாயகரை நியமனம் செய்வார். இந்த சபாநாயகர் நியமனம் என்பது சட்டசபையில் மிக மூத்த எம்எல்ஏவாக இருப்பார். அந்த வகையில் அது தவெகவின் செங்கோட்டையன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அதன்பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மெஜாரிட்டி நிரூபிக்கப்பட வேண்டும். விஜய்க்கு தற்போது 108 இடங்கள் உள்ளன. இதில் விஜய் 2 தொகுதியில் வென்றுள்ளார். இதனால் முதல்வராகி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பார். அதேபோல் செங்கோட்டையன் தற்காலிக சபாநாயகராக இருப்பதால் அவரும் ஓட்டளிக்க முடியாது. இதனால் தவெகவின் பலம் 106 ஆக குறைந்து விடும்.
அதேவேளையில் விஜய்யின் ஒரு தொகுதி ராஜினாமாவால் சட்டசபையின் மொத்த பலம் 234ல் இருந்து 233 ஆக குறைந்து இருக்கும். அதன்படி பார்த்தால் மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் தவெகவிடம் 106 பேர் தான் இருப்பார்கள். இதனால் 11 எம்எல்ஏக்கள் பிற கட்சிகளிடம் இருந்து தேவைப்படும். இது பொதுவான மெஜாரிட்டி கணக்கு.
அதேவேளையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தில் சட்டசபைக்கு வராமல் இருந்தால் அவர்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படமாட்டார்கள். அப்போது மெஜாரிட்டி நம்பர் குறையும். உதாரணமாக உதாரணமாக தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்திருந்தால் அவர்களின் பலம் 106 ஆக இருக்கும்.
அதேவேளையில் மொத்தமுள்ள 233 எம்எல்ஏக்களில் எதிர்க்கட்சிகளின் 10 எம்எல்ஏக்கள் வராமல் இருந்தால் சட்டசபையில் 223 பேர் இருப்பார்கள். இதனால் 223 எம்எல்ஏக்களில் தான் மெஜாரிட்டி பார்க்கப்படும். இதனால் மெஜாரிட்டி பலம் 112 எம்எல்ஏக்களாக இருக்கும். இதுவும் தவெகவிற்கு இருக்காது. அதேவேளையில் கூடுதலாக 12 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இணைந்து 22 பேர் வராமல் இருந்தால் சட்டசபையில் 211 பேர் இருப்பார்கள்.
அப்போது தவெகவின் அனைத்து 106 எம்எல்ஏக்களும் இருக்கும் பட்சத்தில் மெஜாரிட்டி 106 ஆக இருக்கும். இதனால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவின்றி தவெகவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும். அதோடு தனித்து ஆட்சியை தொடர முடியும். ஆனால் இதனை சாத்தியமாக்குவது கடினம். ஏனென்றால் இவ்வளவு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தினத்தில் சட்டசபைக்கு செல்லாமல் இருப்பார்களா? என்பது கேள்விக்குறி தான்.
ஒருவேளை இது நடந்தால் விஜய் 'மைனாரிட்டி' அரசை நடத்தலாம். பிற கட்சிகளின் கூட்டணியின்றி முதல்வராக விஜய் தனித்துவமாக செயல்பட முடியும். ஆனால் நீண்டகாலம் இப்படி செயல்பட முடியாது. ஒருமுறை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துவிட்டால் அடுத்த 6 மாதங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியாது.
ஆனால் அதன்பிறகு எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரலாம். இதனால் இந்த லாஜிக் எல்லாம் தற்காலிகமானதாக விஜய்க்கு நிம்மதியை தரலாம். ஆனால் 5 ஆண்டுகளையும் பிரச்சனையின்றி விஜய் முதல்வராக முடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவர் பிற கட்சியினரின் நம்பிக்கையை பெற்று உறுதியாக 118 அல்லது அதற்கு மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவை பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications