மோடியின் தமிழக வருகையை எப்படி பார்க்கிறீர்கள் ? அக்கறையா OR அரசியலா? பொதுமக்களின் கருத்து இதுதான்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். இந்த சுற்றுப்பயணத்தையொட்டி, ‛‛பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று ‛ஒன் இந்தியா தமிழ்''நடத்திய Poll-லில் 34 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். அதற்கான ரிசல்ட் முடிவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு சென்றார். முதலில் பிரிட்டன் சென்றவர் அதன்பிறகு மாலத்தீவுக்கு சென்றார். மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். மாலத்தீவில் இருந்து தனி விமானத்தில் நேற்று அவர் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.

அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். பாஜகவும், அதிமுகவும் கூட்டணியில் உள்ளதால் அங்கு எடப்பாடி பழனிச்சாமி அவரை சந்தித்து பேசினார். அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் யார்டு மாரியாட் ஹோட்டலில் இரவில் தங்கினார்.
இன்று காலையில்11:30 மணியளவில் காரில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது 8 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தினார். பிறகு ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு சென்றார். பொன்னேரி ஹெலிபேடில் இறங்கி காரில் 3 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றார். அப்போது பொதுமக்கள் மலர்களை தூவி அவரை வரவேற்றனர்.
பிரகதீஸ்வரர் கோவிலில் பெருவுடையாரை பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அங்கு நடந்த கண்காட்சியை பார்த்த அவர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ரசித்தார். அதன்பிறகு முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். சோழர்களுக்கு சிலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த விழாவை முடித்த பிறகு பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே தான் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுதொடர்பாக ‛Oneindia Tamil' யூடியூப் பக்கத்தில் Poll வைக்கப்பட்டது.

அதில், ‛‛பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அக்கறை என்று ஒரு ஆப்ஷனும், அரசியல் என்று இன்னொரு ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருந்தது. மொத்தம் 34 ஆயிரம் பேர் வாக்களித்தனர். அதில் ‛அரசியல்' என்று 76 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். ‛அக்கறை' என்று 24 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications