தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருக்கு? புட்டு புட்டு வைத்த ஜெயரஞ்சன்!
சென்னை: நாடு சுதந்திரம் பெறும்போது பொருளாதார வளர்ச்சி பட்டியலில் கடைசி 3வது இடத்திலிருந்த தமிழ்நாடு படிப்படியாக முன்னேறி எப்படி முதல் இடத்திலிருந்து 2வது நிலைக்கு வந்தது என்பது பற்றி ஜெயரஞ்சன் மிக விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.
மத்திய அரசு 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டது என்பது பற்றி திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. அதற்கு பாஜக தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. தொடர்ந்து இலவசத் திட்டங்களை வாரி வழங்குவதால் தமிழ்நாட்டின் நிதி நிலை மோசமாகி வருகிறது என வலதுசாரிகள் ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளது என்பதை புட்டு புட்டு வைத்துள்ளார் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன். அவர் தமிழக வளர்ச்சி பற்றிப் பேசும் போது, "இந்தியப் பொருளாதாரம் என்பது தனியாக இல்லை. அது பல மாநிலங்களின் பொருளாதாரங்களின் தொகுப்பாகத்தான் இருக்கிறது. இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களின் மதிப்புகளைச் சேர்த்து கணக்குப் போட்டு அதை மாநில வாரியாக வரிசைப்படுத்துவார்கள். அந்த வரிசையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம்தான் உள்ளது. அடுத்ததாக 2வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. மகாராஷ்டிரா மக்கள் தொகையிலும் நிலப்பரப்பிலும் பெரிய மாநிலம். இந்தியாவின் நிதி தலைமையகமான மும்பை அம்மாநிலத்தில்தான் உள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமையகம் அங்கேதான் உள்ளது. சுதந்திரம் பெற்றபிறகு தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்திலிருந்தது தெரியுமா? கீழே இருந்து 3ஆவது இடத்திலிருந்தது. அன்றைக்குப் பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கீழேதான் தமிழ்நாடு இருந்தது. அன்றைக்கு தமிழ்நாடு வறுமை மிகுந்த மாநிலம். அந்தக் காலத்தில் 3 வேளையும் உணவு சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. 1960 வரை இதுதான் நிலை.
தமிழ்நாட்டில் நீர்வளம் இல்லை. அண்டை மாநிலமான கர்நாடகாவில் தண்ணீர் கேட்டு இன்றுவரைப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பீகார், உபியில் எல்லாம் வற்றாத ஜீவநதிகள் உள்ளன. நம் மாநிலத்தில் நிலக்கரி போன்ற அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளனவா? இல்லை. அப்படி இருந்தும் நாம் இன்று அதிக அளவில் முன்னேறி 2வது இடத்திற்கு வந்துள்ளோம். இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது? கடைசியிலிருந்து 3 ஆவது இடத்திலிருந்த நாம் முதலிலிருந்து 2வது இடத்திற்கு வந்துள்ளோம்.
சில நாட்கள் முன்னதாக மத்திய அரசின் நிதி ஆயோக் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் தொடர்ச்சியான இடைவெளி இல்லாத வளர்ச்சியை பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது எனக் கூறியுள்ளது. நம் மாநிலம் முன்பே பொருளாதாரத்தில் 2வது இடத்தில் உள்ளோம். அதைத்தாண்டி இப்போது இடைவெளி இல்லாத வளர்ச்சியில் 2வது இடத்திற்கு வந்துள்ளோம்.
முன்பு தனி நபர் வருமானத்தை மட்டுமே வைத்து மாநிலப் பொருளாதார வளர்ச்சியானது கணக்கிடப்பட்டது. ஆனால், இன்று சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் கருத்தியல் மாற்றங்களால் 16 குறியீடுகளை முன்வைத்து பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம், ஆண் பெண் சமத்துவம், வர்த்தக ரீதியாக உள்ள இடைவெளி, இயற்கை வளங்களைச் சுரண்டாமல் இருப்பது என 16 குறியீடுகளைக் கொண்டு அளவிட்டு ஒரு மாநிலத்தின் வளர்ச்சி கணிக்கப்படுகிறது. அந்தக் குறியீட்டின்படி தமிழ்நாடு 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்தியாவில் 3 வேளை உணவு சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. குஜராத்தில் 3 வேளையும் சாப்பிட முடியாமல் தவிக்கும் மக்கள் 34% உள்ளனர். இந்திய அளவில் இது 42% ஆக உள்ளது. 99% மக்கள் 3 வேளையும் சாப்பிடும் மாநிலம் மொத்தம் 2 தான். ஒன்று, தமிழ்நாட்டு. இரண்டு, கேரளா. இது எப்படிச் சாத்தியமானது? நியாயவிலைக்கடைகள் என்ற திட்டத்தால்தான். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 95% மக்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வறுமையை வென்றுள்ளனர். நகரப்புறங்களில் 72% மக்கள் இதனால் பலன் பெற்றுள்ளனர். இந்தியாவில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் அதிக அளவில் பலன் பெறும் மக்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்தப் பொதுவிநியோக திட்டத்திற்கான நிதியில் 50% மத்திய அரசு தருகிறது. மீதம் உள்ள 50% நிதியைத் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியைச் செலவு செய்கிறது. ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடியை நாம் இதற்காகச் செலவு செய்கிறோம்.
வெறும் சோறு போட்டுவிட்டால் போதுமா? அவர்கள் கல்வி அறிவு பெற வேண்டாமா? இந்தியா விடுதலை பெற்ற போது 100 பேரில் 10 பேருக்குத்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தது. 90% பேருக்கு தனது பெயரையே எழுதத் தெரியாமல் இருந்தது. அதை மாற்றி அனைவருக்கும் கல்வி என்பதை உருவாக்கினோம். அதற்காகத்தான் ஊருக்கு ஊர் பள்ளிக்கூடங்களைக் காமராஜர் திறந்தார். அதன்பின்னர் கல்வி வளர்ந்து இன்று உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 52% ஆக உள்ளது.
அப்படிப் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தோம். அதன் விளைவாகப் பல தரப்பட்ட மக்கள் முன்னேறி வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இப்போது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு Global Capability Centres அதிக அளவில் உருவாகி உள்ளோம். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் வேலைகள் அதிகம் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்தால் அவர்களுக்குத் தரப்படும் சம்பளத்தில் 10% பணத்தைத் தமிழ்நாடு அரசே வழங்கி வருகிறது.
முதன்முதலாக ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது கிளையை தொடங்கிய போது 40 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. இப்போது 3 தொழிற்சாலைகளை அது திறந்துவிட்டது. இப்போது வெறும் 4 ஆயிரம் பேருக்குத் தான் வேலை கிடைக்கிறது. ஏனென்றால், பாதி வேலைகளில் தொழில் நுட்ப வளர்ச்சியால் ரோபோவை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. அதை உணர்ந்து இப்போது புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி தரும்போது வேலைவாய்ப்பு அதிகம் தரக்கூடிய நிறுவனங்களைப் பார்த்துத் தேர்வு செய்து வருகிறோம். வரும் காலங்களில் மாற்றங்கள் பெரிய அளவில் இதில் நடக்க உள்ளது" என்று பல உதாரணங்களை முன்வைத்துப் பேசியுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications