பரந்தூர் கம்பன் கால்வாயை அழித்தால் சென்னையில் வெள்ள அபாயம் எப்படி? kamban canal வரலாறு என்ன?
சென்னை: கம்பன் கால்வாயை அழித்துவிட்டு பரந்தூர் விமான நிலையம் கட்டினால் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன், சட்டசபையில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கம்பன் கால்வாய் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதல்வர் விஜய் நேற்றைய தினம் ரத்து செய்தார். இது விவசாயி நிலங்களை அழித்து கொண்டு வரப்படுவதால் அதை ரத்து செய்துவிட்டு வேறு இடத்தில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்தானதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை சுட்டிக் காட்டி பேரவையில் விவாதங்கள் நடந்தன.
அப்போது ராஜ்மோகன் பேசுகையில், பரந்தூர் அருகே இருக்கும் கம்பன் கால்வாய் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொக்கிஷம். இதை அழித்துவிட்டு அது போல் வேறு கால்வாயை உருவாக்க முடியுமா? பரந்தூர் ஒரு உறிஞ்சு நிலம்.
சென்னைக்கு வெள்ளம் வருவதை தடுக்கக் கூடியது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இன்னொரு வெள்ளத்தை சென்னை தாங்குமா? கம்பன் கால்வாயை அழித்துவிட்டு விமான நிலையம் கட்டினால் அது பசுமை விமான நிலையமாக இருக்காது, தண்ணீர் விமான நிலையம் அமைத்து மிதந்து செல்லலாம் என தெரிவித்தார்.
இதில் ராஜ்மோகன் சொன்ன கம்பன் கால்வாய் பரந்தூரில் இருக்கும் நிலையில் அது எப்படி சென்னைக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
பம்பை கால்வாய் என சொல்லப்படும் கம்பன் கால்வாயின் நீளம் 44 கி.மீ. ஆகும். இதன் ஆழம் 15 மீட்டர். இந்த கால்வாயால் 85 ஏரிகள் நிரம்புகின்றன. இந்த கால்வாயால் 22,235 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இதன் மூலம் 5,540 விவசாயிகள் பயனடைவர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் இருந்து தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்தூர், 144 தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரியை அடையும் இந்த கால்வாய்.
இந்த கால்வாய் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இது நூற்றுக்கணக்கான குளங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்கிறது. மழைக்காலம் முழுவதும் இந்த கால்வாயில் தண்ணீர் போகுமாம். இந்த நீரோட்டம் தடைபட்டால் கடைமடையில் உள்ள குளங்கள் நிரம்பாது, நிலத்தடி நீர்மட்டம் உயராது.
பரந்தூர் விமான நிலையம் இந்த கால்வாய்க்கு 7 கி.மீ. தூரத்தில் அமையவிருந்ததாம். அவ்வாறு அமைந்தால் வேறொரு கால்வாயை போட்டு அதன் மூலம் குளங்களுக்கு கொண்டு போய்விடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனராம். ஆனால் அப்படி வெட்டி கொண்டு செல்ல இது ஒன்றும் சாதாரண பைப் இல்லையாம். பல நூற்றாண்டுக்கு முன்னாடி கம்ப வர்மன் என்ற பல்லவ மன்னன் கட்டியதுதான் இந்த கால்வாய்.
இந்த கம்பன் கால்வாய் சிக்கலான நீர் பாசன அமைப்பாக உள்ளது. எனவே வெறும் செயற்கைகோள் படங்களை வைத்து இந்த கால்வாயை அழித்துவிட்டு வேறு கால்வாய் அமைத்து விட முடியாது என்கிறார்கள்.
மேலும் இந்த கால்வாயால் சென்னைக்கு என்ன சம்பந்தம் என்றால், இந்த கால்வாய் இருந்து நீரானது ஸ்ரீபெரும்புதூர் ஏரியை வந்தடையும் என ஏற்கெனவே கூறியிருந்தோம். இந்த ஏரியின் உபரி நீர்தான் கூவம் நதியின் மிக முக்கியமான நீர் ஆதாரமாகும்.
ஒரு வேளை இந்த கம்பன் கால்வாய் அழிக்கப்பட்டால் மழைநீர் கட்டுப்பாடின்றி வழிமாறி ஒரே நேரத்தில் கூவத்திற்கு வந்தால் சென்னைக்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை ஒரு தாழ்வான கடலோர பகுதியாகும். இங்கு வரும் மழைநீரை உள்வாங்கி சேமிக்கும் பஞ்சு போல் காஞ்சிரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஏரிகளும் கால்வாய்களும் செயலாற்றி வருகின்றனர். எனவே பரந்தூர் விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அதனால் கம்பன் கால்வாய் அழியும் நிலை ஏற்பட்டால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படாமல் நேராக சென்னை நோக்கி வரும் நிலை ஏற்படும் என்கிறார்கள். எனவே சென்னைக்கு பெரும் வெள்ளம் ஏற்படாமல் தடுத்து வருவதில் கம்பன் கால்வாய்க்கு பெரும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
