தமிழ்நாட்டில் திமுக 36.. அதிமுக, பாஜகவுக்கு எத்தனை சீட் தெரியுமா? ஜீ நியூஸ் சுவாரசிய கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வரும் லோக்சபா தேர்தலில் யார் அதிக இடங்களைப் பிடிப்பது, பாஜக எத்தனை சீட்களில் வெல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், Zee news - Matrize நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் யார்?: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், திமுக தலைமையிலான INDIA கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 2 இடங்களில் அதிமுக கூட்டணியும், ஒரு இடத்தில் பாஜகவும் வெற்றி பெறும் என ஜீ நியூஸ் - மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 60 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 20% வாக்குகளையும், அதிமுக 16% வாக்குகளையும், மற்ற கட்சிகள் 4 சதவீத வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அதிகம்: குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக அதிக வாக்கு சதவீதத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவை விட குறைவான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றாலும் கூடுதலாக 1 சீட்டில் அதிமுக வெல்லும் என்கிறது ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பு ரிசல்ட்.
புதுச்சேரி: அதேபோல, புதுச்சேரி லோக்சபா தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என ஜீ நியூஸ் கணிப்பு தெரிவிக்கிறது. திமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் வெற்றி பெறக் கூடும் எனத் தெரிவித்துள்ளது இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள்.
கேரளாவில் காங்கிரஸ் க்ளீன் ஸ்வீப்: அதேபோல, தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மட்டுமல்லாது கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கும் வெறுங்கை தான் என்கிறது இந்தக் கணிப்பு.
தென் மாநிலங்கள் நிலை: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும், பாஜக கூட்டணி 13 இடங்களையும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், பி.ஆர்.எஸ் கட்சி 2 இடங்களையும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 1 இடத்தையும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 23 தொகுதிகளையும், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களையும் பெறக் கூடும் என ஜீ நியூஸ் கணிப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும்: ஒட்டுமொத்தமாக வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 390 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியா கூட்டணி 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 57 இடங்களில் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications