என்டிஏவில் அமமுவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லியில் பேசியது என்ன? ஓபனாக சொன்ன டிடிவி தினகரன்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லி சென்று அமித்ஷா, பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். இதில் என்.டி.ஏ கூட்டணியில் 12 தொகுதிகள் அமமுகவுக்கு பாஜக ஒதுக்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி சென்று திரும்பிய டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டது.

அதிமுக பாஜக கூட்டணி
இவரை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லி சென்றார். எடப்பாடி பழனிசாமி மடடுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களும் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பது சென்னையிலா?, டெல்லியிலா? என்ற விவாதமும் சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாக மாறி போனது.
இந்த நிலையில், அதிமுக-பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தான் டெல்லி சென்ற டிடிவி தினகரனிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவருக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட டிடிவி விரும்பவில்லை என்றும், குக்கர் சின்னத்திலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் பரவியது.
அமமுகவுக்கு 12 தொகுதிகள்
இதற்கிடையே தான் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பியூஷ் கோயலையும் சந்தித்து பேசினேன். இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.. ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பியூஸ் கோயல் சென்னையில் வந்து உட்கார்ந்து பேச முடியாது.
சென்னை வந்ததும் டிடிவி பேட்டி
எனவேதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து அமித்ஷாவை பார்த்தார். பாஜகவுக்கான தொகுதிகளை பற்றி பேசி இருப்பார்கள். பேசி இருக்கலாம் எனக்கு தெரியவில்லை. நாங்கள் அமித்ஷாவிடம் 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் எல்லாம் எப்படி எதிர்கொள்வது என பேசினோம். பீகார் போல பீகாரில் எவ்வாறு தேர்தல் வெற்றி பெற்றார்களோ, அவ்வாறு தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்டு அனைத்து தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம்" என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை வந்தடைந்ததும் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- ஏற்கனவே பியூஸ் கோயல் தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் அது தள்ளிப்போனது. எனவே நாங்கள் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம்.. அமைச்சர் கே என் நேரு நாங்கள் டெல்லி சென்றால் ஆடிப்போய்விடுகிறார்.. தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு சென்னையில் தன் இறுதியாகும்.
அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தொகுதி பங்கீடு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிறைவடையும். சுமூகமாக அமையும்" என்றார். அப்போது செய்தியாளர்கள் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. முதலில் 5 தொகுதி என சொன்னாங்க.. இப்போது 8 தொகுதி என சொல்றீங்க.. எங்களுக்கு எத்தனை தொகுதி என்பதை நாங்க சொல்வோம்.. அதற்கு முன்னாடி நீங்களே எதாவது பரப்பிக்கிட்டு இருக்கீங்க.. நாளை மறுநாள் பியூஸ் கோயல் வர உள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications