ஒரு கிலோ உடல் எடையை குறைக்க.. "இவ்வளவு" தூரம் நடந்தால் போதுமாம்.. எளிமையாக விளக்கிய பிரபலம்
சென்னை: இந்தக் காலத்தில் உடல் பருமன் என்பது பல்வேறு தரப்பினருக்கும் பெரிய பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், எடை குறைப்பிற்கு வாக்கிங் மிக முக்கியம் என்கிறார் உடல் எடை குறைப்பு நிபுணர் அஞ்சலி சச்சான்! வாக்கிங் என்பது உடல் எடை குறைப்பில் எந்தளவுக்குப் பயன் தரும் என்பதை விளக்கிய அவர், ஒரு மணி நேரம் வாக்கிங் சென்றால் எந்தளவுக்கு உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
இந்த காலத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் பலரும் இருக்கிறோம். காலை முதலே மாலை வரையிலும் கூட ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழலே இருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் உடலுக்கு வேலை இல்லாமல் போவதால்.. உடல் எடை படுவேகமாக அதிகரித்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் உடல் பருமன் காரணமாகப் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

உடல் பருமன்
அப்படி உடல் பருமன் காரணமாகச் சிரமத்தை எதிர்கொள்வோர் பெரும்பாலும் வாக்கிங் செல்வார்கள். ஆனால், சில வாரங்கள் வாக்கிங் போன பிறகும் தங்கள் உடல் எடை குறையவில்லை எனப் பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். நீங்கள் போதுமான தூரத்தை நடக்காமல் போவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.. இதற்கிடையே ஒரு கிலோ கொழுப்பைக் குறைப்பது எவ்வளவு ஈஸி.. ஒருவர் தினசரி எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து உடல் எடை குறைப்பு நிபுணர் அஞ்சலி சச்சான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்..
வாக்கிங் முக்கியம்
உடல் எடையைக் குறைக்கும் பயனுள்ள மற்றும் நிலையான வழிகளில் நடைப்பயிற்சி முக்கியமானது என அவர் குறிப்பிடுகிறார். மேலும், ஒரு கிலோ கொழுப்பைக் குறைக்க எவ்வளவு நடக்க வேண்டும் என விளக்கி, அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அஞ்சலி சச்சான், "ஒரு கிலோ கொழுப்பு என்பது சுமார் 7,700 கலோரிகள். இந்த எடை பார்க்க அதிகமாக தெரிந்தாலும் இது அவ்வளவு அதிகம் இல்லை.. இந்த எண்ணிக்கை என்பது சேமிக்கப்பட்ட உடல் கொழுப்பிலிருந்தே வருவது. நீர் எடை, வீக்கம், கிளைகோஜன் அல்ல. கொழுப்பு என்பது சேமிக்கப்பட்ட ஆற்றல் என்பதால் அது கரைய அதிக நேரம் எடுக்கும். அதேநேரம் ஒருமுறை அந்தக் கொழுப்பை நீங்கள் எரித்துவிட்டால், அது நிரந்தரமாக அழிந்துவிடும்.
ஒரு கிலோ குறைக்க
நீங்கள் நடக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கும் 50-70 கலோரிகள் எரிக்கப்படும். உங்கள் உடல் ஒவ்வொரு அடிக்கும் எனர்ஜியை பயன்படுத்துகிறது. தசைகளை நகர்த்துகிறது, சமநிலையைப் பராமரிக்கிறது. அதன்படி பார்த்தால் ஒரு கிலோ கொழுப்பைக் குறைக்கச் சுமார் 1,28,000 முதல் 1,50,000 படிகள் நடைப்பயிற்சி தேவை. இவ்வளவு தூரம் நடக்கணுமா என நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்.
தினமும் 10,000-15,000 படிகள் நடந்தாலேயே 10- 12 நாட்களில் ஒரு கிலோ கொழுப்பைக் குறைக்கலாம் என அஞ்சலி சச்சான் தெரிவிக்கிறார். இது உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அல்லது தினசரி கலோரி எரிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் கிடைக்கும் பலன். நடைப்பயிற்சி மக்கள் நினைப்பதை விட சக்தி வாய்ந்தது.
மேஜிக் இல்லை
அதேநேரம் கொழுப்பு குறைப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் மேஜிக் இல்லை.. தொடர்ச்சியான விடாமுயற்சி அதற்குத் தேவைப்படும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டெப்களை வைக்கும்போது அதைத் தினசரி கலோரி எரிப்பாகக் கருதினால் அது உத்வேகத்தைக் கொடுக்கும்.. நிலையான கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும்" என்றார்.
நன்மைகள்
மேலும், நடைப்பயிற்சி காரணமாக நமக்கு எப்படி நன்மை ஏற்படுகிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
- கலோரிகள் எரிப்பு
- படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்தல்
- பசியைத் தூண்டாமல் இருக்கும்
- ஹார்மோன் மற்றும் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படாது
- சோர்வைத் தவிர்க்க முடியும்
- மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
கொழுப்பைக் குறைக்கவும் உடல்நலனைப் பாதுகாக்கவும் வாக்கிங் மிக சிறந்த ஒரு முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் உடற்பயிற்சியால் மட்டும் கொழுப்பைக் குறைக்க முடியாது என்ற அஞ்சலி, அது ஒரு பிராசஸ் என்றும் தினசரி நடைப்பயிற்சி அதற்குப் பெரியளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தினசரி நடைப்பயிற்சி ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அதேநேரம் கொழுப்பு குறையவும் உதவும் என்றார். கொழுப்பு குறைப்பு என்பது மேஜிக் இல்லை.. தொடர் முயற்சி முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!












Click it and Unblock the Notifications