ஆஹா! நைட்டோடு நைட்டா செம திருப்பம்.. ஏக வருத்தத்தில் ஓபிஎஸ் எடுத்த முடிவு! உச்சபட்ச கோபத்தில் இபிஎஸ்
சென்னை: அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை குறித்த விவாதங்கள் எழுந்து உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் இந்த குரல்கள் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளன.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 21 மாநகராட்சிகளில் அதிமுக ஒன்றை கூட இந்த முறை கைப்பற்றவில்லை. அதிமுக சந்தித்த நகர்ப்புற உள்ளாட்சி தோல்விகளில் இதுதான் மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது.

நிர்வாகிகள் அதிருப்தி
இந்த தேர்தல் அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பல நிர்வாகிகள் தேர்தல் முடிவால் அதிருப்தியில் உள்ளனர். தலைமை சரியில்லை. கட்சி சரியான முடிவுகளை எடுக்கவில்லை. வலிமையான திமுகவை எதிர்க்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு கொண்ட தலைவர் அதிமுகவில் இல்லை. இதனால் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும். மீண்டும் சசிகலா அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோரும் இதை பற்றி மனம் திறந்து பேசினர்.

ஜெயக்குமாரை கண்டுகொள்ளவில்லை
தேர்தல் தோல்வியோடு ஜெயக்குமார் கைதும் அதிமுகவினர் இடையே ஒற்றை தலைமை கோரிக்கையை தீவிரப்படுத்தியது. முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுகிறார்.. அதிமுக தலைமை ஒரு போராட்டத்தை கூட நடத்தவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்து இப்படி கைது நடந்தால் ஸ்டாலின் விட்டு இருப்பாரா என்று அதிமுகவினர் பலர் தலைமையிடம் கேட்டு இருக்கிறார்களாம். ஜெயக்குமாருக்கே இந்த நிலைதான் என்றால் மற்ற நிர்வாகிகள் என்ன செய்வது.. இந்த இரட்டை தலைமையை நம்பி இருக்க முடியாது என்று தலைமை பற்றி மூத்த நிர்வாகிகள் பலர் கடிந்து கொண்டு உள்ளனர்.

ஜெயக்குமாரால் வந்த மோதல்
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஜெயக்குமாரை சந்திப்பதிலும் கூட எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த வாரம் நேரில் சந்தித்து பேசினார். எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் இதில் உடன் இருந்தனர். ஓ பன்னீர்செல்வத்திடம் சொல்லாமல் எடப்பாடி தனது டீமுடன் சென்று தனியாக சந்தித்தாக கூறப்படுகிறது.

ஏக வருத்தத்தில் ஓபிஎஸ்
இதையடுத்து கடுமையாக வருத்தத்திற்கு உள்ளான ஓ பன்னீர்செல்வமும் ஜெயக்குமாரை நேரில் சென்று சந்தித்தார். ஓ பன்னீர்செல்வம், கே பி முனுசாமி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஜெயக்குமாருக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக எடப்பாடி மீது ஓபிஎஸ் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி இப்படி சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டாரே.. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் அரசியல் செய்கிறாரே.. இப்படியே போனால் கட்சியில் இருக்கிற மரியாதையும் போய்விடும் என்று ஓபிஎஸ் சக நிர்வாகிகளிடம் புலம்பி இருக்கிறாராம்.

இரவோடு இரவாக
இக்கட்டான நேரத்தில் கூட ஜெயக்குமாரை சந்தித்து தொண்டர்களிடம் தான்தான் தலைவர் என்று "ஸ்கோர் " செய்ய எடப்பாடி முயன்றதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டி இருக்கிறாராம். இதையடுத்தே தற்போது சசிகலாவை உள்ளே கொண்டு வருவதற்கான பணிகளை ஓபிஎஸ் முடுக்கிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா வந்தால்தான் சரியாக இருக்கும்.. அப்போதுதான் கட்சியில் மீண்டும் தனக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று ஓபிஎஸ் நினைக்கிறாராம். இதனால்தான் நேற்று இரவோடு இரவாக தேனி மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ் முடுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சான்ஸ் இல்லையாம்
ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் நேற்று சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். நேற்று இரவு பேட்டி அளித்த அவர், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். டிடிவி தினகரனையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். இவர்கள் இருவரையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்தாலே கட்சியில் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று கூறினார். இவர் ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமானவர்.

அவருக்கு போய்விட கூடாது
ஓபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்த பின்பே அவர் இப்படி சசிகலாவிற்கு ஆதரவாக பேசுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஒற்றை தலைமை பேச்சு அடிபடுகிறது. இதை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையை பெற்றுவிட கூடாது. அது சிக்கலாகும், சசிகலாவை உள்ளே கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று திட்டமிட்டு சசிகலா பேச்சை அதிமுகவிற்குள் ஓபிஎஸ் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தென் மாவட்ட நிர்வாகிகளும் விரைவில் ஓபிஎஸ் பின்னே அணி திரள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இபிஎஸ் கோபம்
ஓபிஎஸ்ஸின் இந்த முடிவால் எடப்பாடி தரப்பு அதிருப்தியில் இருக்கிறதாம். சசிகலாவை இப்படி ஓபிஎஸ் கொஞ்சம் இறங்கி வந்து ஆதரிப்பார் என்று நினைக்கவில்லையாம். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக தோல்வியால் எடப்பாடி ஏக கடுப்பில் இருக்கிறார். இதனால் கட்சிக்குள் தனது மவுஸ் குறைந்துவிட்டதாக அவர் வருத்தத்தில் இருக்கிறாராம். தற்போது ஓபிஎஸ்ஸின் இந்த புதிய யுக்தி அவரை இன்னும் கடுப்பில் ஆழ்த்தி உள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications