"அம்மா இல்லாமல் போக முடியாது!" கேரள நரபலி விவகாரம்.. தமிழ் பெண்ணின் உடலை பெறுவதில் உள்ள சிக்கல் என்ன
சென்னை: தர்மபுரியை சேர்ந்த இளைஞர் கேரளாவில் தனது தாயின் உடலை வாங்கத் தனி ஆளாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னிந்தியாவையே உலுக்கும் கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியது. மூடநம்பிக்கை காரணமாக நரபலி கொடுக்கப்பட்டதால் இருவரின் உயிர் அநியாயமாகப் பறிபோனது.
தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் இவர் திடீரென மாயமான நிலையில் இது தொடர்பாக போலீசாரில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

கேரளா நரபலி
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜூன் மாதம் ரோஸ்லின் என்ற 50 வயது மதிக்கத்தக்கப் பெண் மாயமானதும் தெரிய வந்தது. இருவரின் செல்போன் எண்ணும் ஒரே இடத்தில் தான் இணைப்பை இழந்து இருந்தது. போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், பகவத் சிங், அவரது மனைவி லைலா சிங் ஆகியோர் முகமது ஷபி என்பவருடன் இணைந்து பெண்கலை நரபலி கொடுத்ததைக் கண்டுபிடித்தனர்,

சிக்கல்
மேலும், பெண்களைக் கொலை செய்யும் முன்பு, மிகக் கொடூரமாக டார்ச்சரும் செய்து உள்ளனர். குற்றவாளிகளை போலீசார் கைது செய்து இருக்கும் நிலையில், அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். போலீசார் விசாரணை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் கொலை செய்யப்பட்ட பத்மாவின் மகன் செல்வராஜ் கேரளாவில் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். செல்வராஜ் அங்குச் சென்று 27 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் கூட தாயாரை உடலை அவரால் பெற முடியவில்லை.

எப்போது
இதற்காக அவர் கொச்சியிலேயே வீடு எடுத்தும் தங்கியுள்ளார். தனது தாயின் நினைவலைகளால் நிறைந்து இருக்கும் செல்வராஜ், எப்படியாவது தாயின் உடலைச் சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறார். இதனால் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த அவர் விடுப்பு எடுத்துக் கொண்டு கேரளா வந்துள்ளார். நீண்ட விடுப்பு காரணமாக செல்வராஜ் இப்போது வேலையையும் இழந்துவிட்டார். ஆனால், இன்னும் கூட தாயாரின் சடலம் கிடைப்பதற்கான அறிகுறி கூட தெரியவில்லை.

டிஎன்ஐ சோதனை
டிஎன்ஐ சோதனைக்குப் பின்னர் சடலத்தைத் தருவதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அந்த டிஎன்ஏ சோதனை எப்போது முடியும் என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் இல்லை. இப்போது கோட்டயம் மருத்துவமனையில் பத்மாவின் சடலம் வைக்கப்பட்டு இருக்கும் சூழலில், அவரது உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கான திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. பத்மாவின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளதால் டிஎன்ஏ சோதனை சவாலாக மாறியுள்ளது.

கடிதம்
கேரளாவில் தனி ஆளாகச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் செல்வராஜ் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடிதம் எழுதியுள்ளார். வேலையையும் இழந்து தான் தடுமாறி வருவதாகவும் தனது தாயின் சடலத்தைத் தாமதமின்றி தர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். இதுவரை கேரள அரசு சார்பில் எவ்வித உதவியும் வழங்கவில்லை என்று கூறும் அவர், கேரள முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா இல்லாமல் போக முடியாது
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "என்னிடமும் தம்பியிடமும் கடந்த அக். 13ஆம் தேதியே டிஎன்ஏ சோதனைக்காக மாதிரிகளை வாங்கி சென்றார்கள். ஆனால் இப்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. போலீசாரிடம் கேட்டாலும் முறையான பதில் இல்லை. பணம் இல்லாமல் நான் தடுமாறி வருகிறேன். ஆனால், என்ன நடந்தாலும் அம்மா இல்லாமல் என்னால் இங்கிருந்து எங்கும் போக முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

தாமதம் ஏன்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இந்த காலதாமதம் தவிர்க்க முடியாதது.. தடயவியல் குழு உடலின் 56 மாதிரிகளையும் கொண்டு டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. உடலைத் தகனம் செய்துவிட்டால் இருக்கும் ஆதாரம் முழுமையாகப் போய்விடும். இது வழக்கு விசாரணையில் எந்த விதமாகச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாகவே தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்கிறார்கள்.

விசாரணை
அதேபோல கொலை செய்யப்பட்ட ரோஸ்லின் டிஎன்ஏ சோதனை முடிவுகளும் இன்னும் முடியவில்லை. விரைவில் சோதனைகளை முடித்து உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்குமாறு போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார். இருந்த போதிலும், குற்றவாளிகள் எந்த சூழலிலும் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகவே விசாரணையைத் துல்லியமாக நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications