‛எதுவுமே வேண்டாம்’.. ரூ.2000 நோட்டை எப்படி எளிதாக மாற்றலாம்? எஸ்பிஐ வங்கி முக்கிய விளக்கம்.. செம!
சென்னை: இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வங்கியில் மாற்றி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எஸ்பிஐ எனும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.1000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக புதிதாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்து வருகின்றன. இதனால் அந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் கரன்சிகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டு 2016 நவம்பர் 2ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கிடையே தான் தற்போது ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுகிறது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் என்பது தற்போதைய நிலையில் பெருமளவு குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் கரன்சி புழக்கத்தின் தேவையை நிறைவு செய்ய இதர மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் போதுமானதாக உள்ளது. இதனால் ரூ.2000 நோட்டுகள் 'கிளீன் நோட் பாலிசி' என்ற அடிப்படையில் திரும்ப பெறப்படுகிறது. பொதுமக்கள் ரூ.2000 நோட்டுகளை மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கிகளில் வழங்கி அதற்கு நிகரான பணத்தை பெற்று கொள்ளலாம். இல்லாவிட்டால் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை முதலீடாக செய்யலாம். ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், சட்டப்பூர்வமாக அந்தநோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து எப்படி மாற்று பணத்தை பெறுவது என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே தான் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அதாவது ரூ.2000 பணத்தை மாற்று கரன்சியாக மாற்ற வேண்டும் என்றால் கட்டணம் உள்ளது. படிவம், அடையாள அட்டை கண்டிப்பாக வங்கிக்கு எடுத்து செல்ல வேண்டும் என இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கியின் தலைமை பொது மேலாளர் (Operationas) முரளிதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கியில் ரூ.2000 நோட்டை அனைத்து பொதுமக்களும் மாற்றி கொள்வதற்கு ஏற்ப வசதி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படிவங்கள் ஏதுமின்றி ஒரே நேரத்தில் வங்கியில் ரூ.20,000 வரை ஒருவர் ரூ.2 ஆயிரம் நோட்டை வழங்கி மாற்று பணத்தை பெற்று கொள்ள முடியும். இதற்கு எந்த படிவமும் (சிலிப்), அடையாள அட்டையும் தேவையில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications