பிரேமலதா சொன்னது உண்மையா? Maths-ல் கடன் வாங்காமல் கழிக்க முடியுமா? ஜப்பான் Subtraction டிரிக்ஸ்!
சென்னை: தமிழக அரசு கடன் வாங்குவது குறித்து பேசியபோது ஜப்பானிய கல்வி முறையில் கணிதத்தில் கழித்தலின் போது பக்கத்து நம்பரிடம் இருந்து கடன் வாங்குவதை அவர்கள் சொல்லித் தருவதில்லை என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கடன் வாங்காமல் சிறிய எண்ணில் இருந்து பெரிய எண்ணை கழிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். ஜப்பானிய கல்வி முறையில் இதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், அடுத்த நாளான 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 7 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது மறைந்த பாக்யராஜ், பின்னணி பாடகி ஜானகி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர். இதைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்களும் பதில் அளித்தனர்.
அந்த வகையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அவர் பேசுகையில் மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடர வேண்டும். விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே நான் கோரிக்கை விடுத்து வருகிறேன். இந்த கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்த்த நிலையில் எனக்கு எனது தொகுதி மக்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தமிழக பிரச்சினைகள் குறித்து பேச பிரதமர் நரேந்திர மோடியிடம் அனைவரையும் அழைத்துச் சென்றார்.
எனவே முதல்வர் விஜய், அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி நீட், மேகதாது, காவிரி பிரச்சினைகளுக்காக பிரதமரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.
அரசுகள் கடன் வாங்குவதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், நமக்கு பள்ளிகளிலிருந்தே கடன் வாங்கிதான் கூட்டல் கழித்தல் கணக்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் கடனில் இருக்கிறது.
ஜப்பானில் எல்லாம் கடன் வாங்கி கணக்கை தீர்க்க சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். இருப்பதற்குள்ளாகவே மாணவர்களுக்கு கணக்கை தீர்க்க கற்றுக் கொடுப்பார்கள். ஆகவே உயர்கல்வி அமைச்சரை கடன் வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வலியுறுத்துகிறேன் என்று பேசியிருந்தார்.
பிரேமலதா சொன்ன ஜப்பான் பாடத்தில் கடன் வாங்காமல் கழிக்க கற்றுக் கொடுப்பது உண்மையா என்பதை பார்க்கலாம்.

உதாரணமாக 100- 65= எவ்வளவு என்பதை பார்க்கலாம். இதற்கு பக்கத்தில் இருக்கும் 0 விலிருந்து கடன் வாங்கி 0-வை 10 ஆக்கி அதிலிருந்து 5-ஐ கழிப்பதற்கு பதிலாக 100- லிருந்து ஒன்றை கழித்துவிடுவோம். அப்படியெனில் 99 வரும். அதுபோல் 65 -ல் கடைசி எண்ணில் மட்டும் ஒன்றை கழித்தால் 64 வரும். தற்போது 99-64 என்பதை கடன் வாங்காமலேயே கழிக்கலாம்.
இப்படித்தான் 6000-4267 என்ற எண்ணில் 1-ஐ கழித்தால் 5999, பிறகு 4267-ல் கடைசி எண்ணில் ஒன்றை கழித்தால் 4266 என வரும் தற்போது 5999-4266 என எளிதில் கழித்து விடலாம்.
அது போல் 0 இல்லாமல் எண்களாக இருந்தால் என்ன செய்வது என்பதையும் பார்க்கலாம். இதில் 9 இன் கூட்டளி 1, 8 இன் கூட்டாளி 2, 7 இன் கூட்டாளி 3, 6 இன் கூட்டாளி 4, 5 இன் கூட்டாளி 5 என்பதை பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக 53- 27 என வைத்துக் கொள்வோம். அதில் இந்திய முறையில் 3- இல் 7 போகாது என்பதால் பக்கத்தில் இருக்கும் 5 இல் இருந்து ஒன்றை கடன்வாங்கினால் 13 ஆகும். அந்த 5, 4 என்றாகும். பின்னர் கழித்தால் 26 என வரும்.
ஆனால் ஜப்பானிய முறையில் இடது பக்கம் இருந்து வலது பக்கம் செல்ல வேண்டும். அப்படி பார்த்தால் 5-ல் 2 போனால் 3 என வரும். ஆனால் அடுத்த எண்ணில் 3- ல் 7 போகாது. எனவே 5-2 = 3 என போட்டதில் ஒன்றை கழித்துவிடுங்கள். பிறகு 3 இன் கூட்டாளி 7 என்பதால் அந்த 3-உடன் மூன்றை கூட்டுங்கள். அப்போது 6 என வரும், எனவே விடை 26 ஆகும்.
இதில் இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். 78 - 39. இதில் 7- 3 = 4, 8 -ல் 9 போகாது எனவே 7-3 = 4 என வந்ததில் இருந்து ஒன்றை கழித்து 3 என வைத்துக் கொள்ளலாம். பிறகு 8-9 இல் 9இன் கூட்டாளி 1 என்பதால் மேலே உள்ள 8-உடன் 1 - ஐ கூட்டினால் 9 வரும். எனவே விடை 39 ஆகும். நீங்களும் இது போல் முயற்சி செய்து பாருங்கள். கமென்ட்டில் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications
