ஈசியா IT Return Filing செய்வது எப்படி? லேப்டாப் இருந்தால் போதும், ஆடிட்டரே வேண்டாம்!
சென்னை: மாதச் சம்பளம் பெறும் பலர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஆடிட்டரை தேடி அலையாமல் இணையதளம் மூலமே மிக எளிதாகச் செய்துவிடலாம். அது எப்படி? அதற்கான வழி முறைகள் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரித்துறை அவகாசம் கொடுத்து வருகிறது. ஆனால், பலர் இறுதி நாள் வரை அலட்சியமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் போய் முட்டி மோதி அவசர அவசரமாகத் தாக்கல் செய்வார்கள். பலரும் அதிகமாகச் சம்பாதிப்பவர்கள்தான் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அப்படியல்ல; குறைவான வருமானம் உள்ளவர்கள் கூட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். அப்படிச் செய்வதன் மூலம் பிற்காலத்தில் அதை ஒரு ஆதாரமாக வைத்து தொழில் தொடங்கவோ, அல்லது தொழிலை மேம்படுத்தவோ முயற்சி செய்யும் போது வங்கியிலிருந்து கடன் உதவி பெற இந்த ஆவணம் மிகப்பெரிய சான்றாக இருக்கும்.
அது குறித்து ஒரு தெளிவாக விளக்கத்தை முன்வைக்கிறார் வரி சேவை நிபுணர் ஜோடி, "மாத ஊதியம் பெறுபவர்கள் தங்களின் வருமான வரிக் கணக்கை அவர்களே தாக்கல் செய்து கொள்ள முடியும். அது ஒரு எளிமையான வழிதான். தொழில் நடத்துபவர்கள்தான் ஒரு முறையான ஆடிட்டரை வைத்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் பாதுகாப்பானதும் கூட.
இப்போது புதிய வரிமுறை, பழைய வரிமுறை என இரண்டும் உள்ளதால் கொஞ்சம் குழப்பங்கள் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால், மாதச் சம்பளதாரர்கள் சொந்தமாகவே இணையம் மூலம் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். ஒரு லேப்டாப் இருந்தாலே போதும். வருமான வரித்துறை இணைய தளத்திற்குச் சென்று வரிக் கணக்கைப் பதிவேற்ற முடியும். அதற்கு ஃபார்ம்16 தேவை, அடுத்து ஒரு ஆண்டுக்கான வங்கிப் பரிவர்த்தனை விவரம் தேவை, கூடவே 12 மாதங்களுக்கான ஊதிய ரசீதும் தேவை.
இந்த விவரங்களைத் தாண்டி வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய உள்ள நிதியாண்டில் என்ன மாதிரியான திட்டங்களில் பணத்தைச் சேமித்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களை வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக எல்.ஐ.சி, மருத்துவக் காப்பீடு, வீட்டுக்கடன், ஏதாவது அனுமதி பெற்ற பங்குச் சந்தை பத்திர முதலீடு, மியூச்சல் ஃபண்ட் ஆகியவற்றுக்கான ரசீதுகளை வைத்திருக்க வேண்டும். இப்போது இணைய தளத்தில் விளையாடும் கேம் வருமானங்கள் கூட வருமான வரிக் கணக்கில் சேர்ந்துவிடும்.
முன்பு இந்த முறை இல்லை. இப்போது சேர்த்துள்ளார்கள். ட்ரீம்லெவன் போன்ற ஆட்டங்கள் மூலம் ஒரு ரூபாய் வருமானம் பார்த்தால்கூட வரிக்கணக்கில் தானாக அப்டேட் ஆகிவிடும். ஏனென்றால் ஆதார் மற்றும் பேன் இரண்டையும் இணைத்துள்ளனர். எனவே வருமானம் பற்றிய அனைத்து விவரங்களும் வருமான வரித்துறைக்கான இணையத்தில் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
வருமானம் குறைவாக உள்ளது என்பதற்காக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என அரசு சொல்லவில்லை. குறைந்த வருவாய் இருந்தால் வரி இல்லை என்றுதான் அரசு சொல்லி இருக்கிறது. ஆகவே, வருமானம் குறைவாக இருந்தாலும் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்வது அவசியம்.
வரிமானத்துறை இணையத் தளத்தில் புதியதாக வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் முதலில் லாக் இன் உள்ளே ரிஜிஸ்டர் ஒன்று காலம் இருக்கும். அங்கே ஆதார், பேன் நம்பர், மொபைல் எண், முகவரி, புகைப்படம் என அடிப்படையாகக் கேட்கப்படும் தனி நபர் பற்றிய விவரங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
அது அங்கீகரிக்கப்பட்ட பிறகு, டேஷ்போர்டு என்ற ஒரு காலம் இருக்கும். அதன் உள்ளே சென்றால் நாம் பதிவேற்றிய அனைத்து விவரங்களும் ஆவணமாகப் பதிவாகி நமக்கு ஒரு அக்கெளண்ட் உருவாகிவிடும். அதில் வங்கி விவரங்கள் என்று ஒரு பகுதி காட்டும். அதில் வங்கிக் கணக்கின் சரியான விவரங்களை அளிக்க வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரி என்றால் அதில் 4 டிக் பச்சை நிறத்தில் காட்டும். அது கிடைத்தால் சரியான விவரங்களை அளித்துள்ளீர்கள் என்பது பொருள்.

டேஷ்போர்டில் ஏஐஎஸ் என்று ஒரு காலம் இருக்கும். அதன் உள்ளாகப் போனால் குறிப்பிட்ட நபரின் வருமானத்தைக் கொண்டு என்ன மாதிரியான வரிச்சலுகைகளைப் பெறலாம் என்று சில விளக்கங்களை அளிக்கும். அடுத்து வியூ ஃபர்ம் 26ஏஎஸ் என ஒரு பகுதிக்குள் நுழைய வேண்டும். அதில்தான் உங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகைக்கான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் 192 விதி கீழ் மாதச் சம்பளம் பெறுபவர்கள் மட்டும்தான் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற நபர்கள் இந்த விதியின் கீழ் செய்யக் கூடாது.
அதன்பிறகு ஐடிஆர் 1 என்று ஒரு பகுதியை இணைய தளம் காட்டும். அதற்கு சென்று வரிக்கணக்கை பதிவேற்ற வேண்டும். மாதச் சம்பளமும் பெற்று பங்குச் சந்தை மூலமும் வருமானம் ஈட்டி வந்தால் ஐடிஆர் 2 படி போய் தாக்கல் செய்ய வேண்டும். வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் 139(1) என எடுத்துக் கொள்ளும். கால அவகாசம் முடிந்து அபராதம் வந்த பிறகு தாக்கல் செய்தாக 139(4) என மாறும். பிறகு நாட்கள் கூடக்கூட இந்த விதி மாற்றம் பெறும்.
மேற்கொண்டு Edit income from salary என உள்ள காலம் போய் வருமான விவரங்களை நிரப்ப வேண்டும். அதற்கு முன் old tax regime என்றும் new tax regime என்று இரண்டு வகைகளைப் பரிந்துரைக்கும். அதில் old படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். new regime பூர்த்தி செய்தால் ஏற்காது. அதுவே நிராகரித்துவிடும். இறுதியாக அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்த பிறகு Proceed to verification என்று காட்டும். அதை அழுத்திவிட்டால் வரி தாக்கல் செய்தது முழுமை அடைந்து விடும்.
இதைச் சரியாகச் செய்தோமா எனப் பார்க்க e-verify என உள்ளது. அதன் வழியாக உங்கள் ஆதார் எண்ணிற்கு ஒரு ஒடிபி எண் வரும் அதை மீண்டும் இட்டு ஒகே கொடுத்தால் வரித் தாக்கல் முடிவடைந்துவிடும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications