பொது நல மனுக்களை தாக்கல் செய்வது எப்படி? சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்
சென்னை: பொது நல மனு தாக்கல் செய்யும் போது உரிய கள ஆய்வு மெற்கொள்ள வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், பொது நல மனு தாக்கல் செய்யும் போது உரிய கள ஆய்வு மெற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
பொது நல மனுக்களை தாக்கல் செய்பவர்கள் உரிய களவு ஆய்வு மேற்கொண்ட பிறகு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகே கோர்ட்டிற்கு வர வேண்டும்.
பொது நல மனு தாக்கல் செய்யும் மனுதாரர், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆர்.டி.ஐயில் அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் தகவல்களை பெற்று மனுவுடன் அந்த விவரங்களை தாக்கல் செய்வது கூடுதல் பலமாக அமையும். ஆனால் அப்படி இல்லாமல் வெறும் புகைப்படங்கள் உள்ளிட்ட சில தகவல்களுடன் மட்டுமே பொது நல மனுக்களை தாக்கல் செய்தால் உரிய நிவாரணம் அளிக்க முடியாது" என்று கூறினார்.
மேலும், மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications