மாம்பழம் வாங்கியிருக்கீங்களா? கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா என வீட்டிலேயே சோதிக்கலாமே!
சென்னை: இயற்கையாக பழுத்ததா இல்லை கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா என மாம்பழங்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
கோடை காலம் வந்துவிட்டாலே குளிர்ச்சியான பொருட்களும் கிடைக்கும். அதே நேரத்தில் அதிக சூட்டை கொண்ட மாம்பழங்களும் கிடைக்கும். முக்கனிகளில் ஒன்றான மாம்பழங்களை பிடிக்காதோர் யாருமே இருக்க மாட்டார்கள்.

மாம்பழங்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதில் ருமானி, அல்போன்சா, நீலம், செந்தூரா, பங்கனபள்ளி உள்ளிட்ட வகைகள் உள்ளன. இதில் ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ஒவ்வொரு டேஸ்ட் உள்ளது.
சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழத்திலும் ஆபத்து உள்ளது. அதாவது மாம்பழங்கள் முதலில் காயாக பறிக்கப்பட்டு அவற்றை ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது. இது வயிற்றுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு, அஜீரணம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதனால் மாம்பழங்களை வாங்கும் போது அவை கல்லில் வைத்து பழுக்காதவைகளை வாங்கி உண்ண வேண்டும். இதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மாம்பழங்களை சோதனையிட்டு அவை கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அழிப்பர்.
எத்தனை சோதனை செய்து குற்றங்களை தடுத்தாலும் எப்படியாவது கல் வைத்து பழுத்த மாம்பழங்கள் விற்கப்பட்டுதான் வருகின்றன. இதை பொதுமக்கள்தான் கண்டுபிடித்து வாங்காமல் இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தனியார் சேனல் ஒன்றுக்கு விவரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கோடை காலம் தொடங்கிய நிலையில் பெரிய மண்டிகளில் ரசாயன கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பர். ஆனால் அந்த கல்லிற்கு பதிலாக குறைந்த அளவிலான எத்தலினை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். இதிலிருந்து வரும் வாயு மூலம் பழங்கள் பழுக்கும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டிப்பாக சுவையாக இருக்காது.
புளிப்பாக இருக்கும். மேலும் பழம் முழுவதும் ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரு கூடையில் இருக்கும் பழங்கள் ஒரே நிறத்தில் ஒன்று போல் பழுத்திருக்கும். மாம்பழங்கள் பொதுவாக அடிப்பகுதியில் இருந்து மேலே உள்ள காம்பு பகுதி நோக்கித்தான் பழுக்கும். எனவே பழம் அப்படி இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
அது போல் ஒரு கூடையில் இருக்கும் பழங்கள் அனைத்தும் பழுத்திருக்காது. ஒன்று போல் இருக்காது. அதன் மேல் கரும்புள்ளிகளும் இருக்காது. பழத்தின் வாசனையும் மூக்கை துளைக்கும் வகையில் இருக்கும். இப்படி இருந்தால் அது இயற்கையான முறையில் பழுக்க வைத்த பழம் என தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாம்பழங்களை வாங்கி வந்து ஒரு பக்கெட் தண்ணீரில் போட வேண்டும். எந்த பழம் அடியில் சென்று நிற்கிறதோ அது இயற்கையான முறையில் பழுக்க வைத்தது. எது மேலே மிதக்கிறதோ அது செயற்கையான முறையில் பழுக்க வைத்தது என்பதை கண்டறியலாம். மாம்பழத்தின் சதை பகுதியை மட்டுமே சாப்பிட வேண்டும். அதன் தோலை சாப்பிடக் கூடாது என சதீஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications