தீபாவளி.. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை.. நெரிசல் இல்லாமல் செல்ல இத்தனை வழிகளா?
சென்னை: சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக பலரும் ஆயத்தமாகி வருகிறார்கள். ஆனால் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு அல்லது முதல் நாளில் ஊருக்கு செல்வோர், செங்கல்பட்டை தாண்டுவதற்கே அரை நாள் ஆகிவிடும்.அந்த அளவிற்கு நெரிசல் ஏற்படும். பெருங்களத்தூர் தொடங்கி வண்டலூர்,கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவிலை தாண்டி பரனூர் போவதற்குள் பல தடைகளை தாண்ட வேண்டியதிருக்கும். சரி.. தீபாவளிக்கு போக்குவரத்து நெரிசலில் எப்படி தப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோருக்கு பயணம் என்பது பொதுவாக இனிமையாக இருக்காது. மிகவும் கசப்பானதாகவே இருக்கும்.. காரணம்.. கடுமையான போக்குவரத்து நெரிசல்.. சென்னையில் இருந்து செங்கல்பட்டை கடப்பதற்கே அவர்கள் தவம் இருக்க வேண்டும்... ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் கிளம்புவதால், ஜிஎஸ்டி சாலை மொத்தமாக ஸ்தம்பித்து விடுகிறது. பல ஆயிரம் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் சென்னையில் இருந்து தீபாவளி நேரத்தில் கிளம்பும்..

இதேபோல் சென்னையில் இருந்து ஏராளமானோர் கார்கள் மூலமும், இருசக்கர வாகனங்கள் மூலமும் சொந்த ஊர் செல்வார்கள். அப்படி செல்வோருக்கு மிகப்பெரிய தடை என்பது, சென்னைக்குள்ளேயே பல இடங்கள் இருக்கின்றன. ஆலந்தூர் முதல் தாம்பரம் வருவதற்கே அவர்கள் நீண்ட நெரிசலை சந்திக்க வேண்டியிருக்கும். அதன்பின்னர் தாம்பரத்தை கடந்தால், பெருங்களத்தூரை கடந்து வண்டலூரை அடைய வேண்டும். வண்டலூர் வரை எவ்வளவு வாகனம் வந்தாலும் நெரிசலோடு நெரிசலாக சென்றுவிட முடியும்.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஊரப்பாக்கம் சிக்னலையும், கூடுவாஞ்சசேரி சிக்னலையும், சிங்கப்பெருமாள்கோவில் பகுதியையும் கடப்பது அவ்வளவு எளிதானது அல்ல.. மிக கடுமையான நெரிசல் ஏற்படும். போதாத குறைக்கு ஓஎம்ஆர் சாலை வழியாக கேளம்பாக்கம் ரூட்டை பிடித்து வண்டலூரை அடைந்த பலரும் வருவார்கள். அவர்களாலும் நெரிசல் அதிகமாக இருக்கும். இதேபோல் வடசென்னையில் இருந்து குறிப்பாக மாதவரம், பொன்னேரி, ரெட்ஹில்ஸ், மீஞ்சூர், எண்ணூரில் இருந்து வாகனங்கள் எல்லாமே கிளாம்பாக்கத்தில் இணைந்துவிடும். இதனால் எல்லா வாகனங்களுமே வண்டலூர் தொடங்கி பரனூர் வரை ஊர்ந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சென்னையில் இருந்து செங்கல்பட்டை தாண்ட பலரும் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் சில மாற்றுவழிகளை நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இதுபற்றி கூறும் போது, தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார். மேலும் அதற்கு பதிலாக திருப்போரூர்-செங்கல்பட்டு வழியாக அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்றார்.
ஆனால் தான்ஸ் என்பவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவின் படி, கூடுவாஞ்சேரி தான் இப்போது புதிய பெருங்களத்தூர்.. கேளம்பாக்கம் வண்டலூர் வழியாக வந்தாலும்.. பெரும் சிக்கல் தான்.. அவுட்டர் ரிங் ரோடு வழியா வந்தா வண்டலூர் சிக்னல் வழியாக வந்தாலும், ஊரப்பாக்கம் தாண்டி கூடுவாஞ்சேரி தாண்டுவதுக்குள்ள தாவு தீந்துடும் என்றார்.
மேலும் ஊரப்பாக்கம் சிக்னல் கூடுவாஞ்சேரி சிக்னல் சிங்கபெருமாள் கோயில் ஜங்ஷன்/சிக்னல் இவை மூன்றும் மிகப்பெரிய சிக்னல்கள் ஆகும், விடுமுறை நாட்களில் வண்டலூரை தாண்டி பரனுர் டோலை அடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிறது. இதுக்கு முன்னாடி இது அரைமணி நேரமாக இருந்தது. அவுட்டர் ரிங் ரோட்ல இருந்து வந்தா வண்டலூர் சிக்னல்ல நின்னு சிக்னலை தாண்டி போகணும்..இதுக்கே கிட்டத்தட்ட 10 முதல் 15 நிமிடங்கள் ஆகலாம்.
அதேநேரம் சென்னையில் இருந்து சொந்த காரில் அல்லது பைக்கில் ஊருக்கு செல்வோருக்கு திருப்போரூர் செங்கல்பட்டு ரூட் எளிதானது.. இதன் மூலம் வண்டலூர் - செங்கல்பட்டு ட்ராபிக்கை தாண்டலாம். அதேநேரம் திருப்போரூர் செங்கல்பட்டு ரூட்டில் போனாலும் பாலாறு பாலத்தில் டிராபிக் ஆகும்.. அதுக்கு பதிலாக மகாபலிபுரம் திருக்கழுக்குன்றம் கருங்குழி ரோட்டில் போகலாம். மதுராந்தகத்துக்கு சிறிது முன்னாடி ஜிஎஸ்டி சாலைகள் சேர்ந்து விடலாம். இந்த ரூட்டில் ஒரு ரயில்வே கேட் இருக்கிறது அதில் மாட்டினால் மட்டும் சிறிது நேரம் ஆகும். இன்னும் ஒரு மாற்று பாதை உள்ளது. மரக்காணம் வரை சென்று அங்கிருந்து பாண்டிச்சேரி திண்டிவனம் சாலைக்கு வில்லேஜ் ரோடு வழியாக செல்லலாம்.. அங்கிருந்து திண்டிவனத்தை அடைந்து வழக்கம் போல் செல்லலாம்..
இதேபோல் வண்டலூர் படப்பை சிங்கப்பெருமாள் கோயில் ரூட்டையும் பயன்படுத்தலாம், இதில் சிங்கப்பெருமாள் கோயில் சிக்னல் டிராபிக்கில் மாட்ட வேண்டியதிருக்கும். தென்சென்னையில் இருப்பவர்கள் திருப்போரூர் ரூட்டை பயன்படுத்தலாம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications