ஒரே நாளில் 2 தவறுகள்.. கிறிஸ்துவர்களை ஒரு பக்கம் இழுக்கும் தவெக! தமிழ்நாட்டில் பாஜக கனவு பலிக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் ஒரு கட்சியின் கொள்கை நிலைப் பாட்டையும் தொலைநோக்குப் பார்வையையும் தீர்மானிப்பதில், அக்கட்சித் தலைவர்களின் அன்றாடப் பேச்சுக்களும் பொதுமேடை நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழக அரசு, அரங்கேற்றிய இரு முக்கிய நிகழ்வுகளால் பெரும் அரசியல் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் மத ரீதியிலான கூட்டப் பங்கேற்பு மற்றும் நிதியமைச்சர் மரிய வில்சனின் உணர்ச்சிவசப்பட்ட சட்டமன்றப் பேச்சு ஆகியவை, மாநிலத்தில் மதச்சார்பற்ற அரசியல் கொள்கையை குலைக்கும் வகையிலான உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

TVK Vijay JCD Prabhakar

புயலை கிளப்பிய இரு நிகழ்வுகள்

முதல் நிகழ்வாக, சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்ட மார்ச் ஃபார் லைஃப் என்ற கருக்கலைப்பு எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். கருவில் உருவாகும் நொடியிலிருந்தே உயிர் தொடங்குகிறது என்று அவர் பேசியது, ஒரு அரசியலமைப்பு பதவியில் இருக்கும் தலைவர் மத ரீதியிலான உணர்வுகளுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பேசுவது முறையா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்த விவகாரம் சர்ச்சையாக காரணம் உள்ளது. முக்கியமாக கருக்கலைப்பு என்பது பெண்ணின் முடிவு. அதை எதிர்க்கவோ, தடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. கருக்கலைப்பை அமெரிக்கா போன்ற நாடுகளில் சில தீவிர வலதுசாரி அமைப்புகள் வேண்டுமானால் எதிர்க்கலாம். அங்கே வலதுசாரிகள் எதிர்ப்பதை இங்கே ஜே.சி.டி. பிரபாகர் எதிர்க்கிறார் என்பதுதான் சர்ச்சையாகி உள்ளது. கிறிஸ்துவர்கள் நடத்தும் ஒன்றில் இப்படி கோஷம் எழுப்பப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது.

இரண்டாவது நிகழ்வு, சட்டப்பேரவையில் நேற்று விவகாரத்தின் போது நிகழ்ந்தது. கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டி.எம். ராஜேந்திரன், நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன்:

எனக்கு ஒரு மொழியை எனது கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது; அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது பாதிபேருக்கு, எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிளை படித்திருக்கிறேன், பிறப்பால் கிறிஸ்தவன், என்று உருக்கமாகப் பேசினார். தமிழ் மொழி நடை பற்றிய விமர்சனத்திற்கு, தன் கிறிஸ்தவ அடையாளத்தையும் பைபிளையும் முன்னிறுத்திப் பதிலளித்தது பேரவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உங்கள் தமிழில் தவறு இருக்கிறது என்றால் பதிலுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்.. முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் மட்டும் நன்றாக தமிழ் பேசுவாரா என்று கூட சொல்ல இருக்கலாம்.. ஆனால் இங்கே மதத்தை இழுக்க வேண்டிய அவசியம் என்ன?

தவறிய அரசியல் காய்நகர்த்தல்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை நீண்டகாலமாக மதச்சார்பின்மையையும் தமிழ் மொழி உணர்வையும் முதன்மையாக வைத்து அரசியல் செய்து வந்தன. சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொது நிர்வாகத்தில் மத அடையாளங்களை அதிகமாக வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்வதில் திமுக அரசு கவனமாகச் செயல்பட்டது.

ஆனால், தவெக தலைவர்களின் இந்த சமீபத்திய செயல்பாடுகள் இரு வழிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்:

கிறிஸ்தவ வாக்காளர்களின் அதிருப்தி: அரசையும் சட்டமன்ற விவாதங்களையும் மதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது, வழக்கமாக அமைதியான சூழலை விரும்பும் சிறுபான்மை சமூகத்தினரை தேவையற்ற அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுத்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதாவது கிறிஸ்துவர்களை ஒரு பக்கமாக நகர்த்தி கொண்டு சென்றுவிடும். கிறிஸ்துவர்களை மற்ற மதங்களுக்கு எதிராக நிற்க வைத்துவிடும்.

2. பா.ஜ.க.வின் இந்து வாக்கு ஒருங்கிணைப்பு: தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு, இந்த நிகழ்வுகள் மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளன. தவெக அரசு கிறிஸ்துவ மத அடிப்படையிலான கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்ற இந்துக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுத்து, இந்து வாக்குகளை ஒரே அணியில் திரட்டுவதற்கு பா.ஜ.க. இதனைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

தவெகவிற்கு சவால்

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தவெக கட்சிக்கு இதுவே முதல் பெரிய அரசியல் சோதனையாகக் கருதப்படுகிறது. தனிநபர் நம்பிக்கையாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயங்கள், அரசமைப்பு பதவிகளில் இருக்கும் தலைவர்களால் பொதுவெளியில் பேசப்படும் போது அது கட்சியின் ஒட்டுமொத்த கொள்கையையே கேள்விக்குறியாக்குகிறது.

திராவிட அரசியல் மரபில் மொழிப் பற்றும் சமூக நல்லிணக்கமும் முதன்மை பெற்றிருக்கும் சூழலில், தவெகவின் இந்த இரு தவறுகள், தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் புதிய ஆயுதத்தைக் கொடுத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+