மீண்டும் மீண்டும் திமுக - இந்தியா கூட்டணி.. பாமக அங்கே பட்டாசு வெடிக்க.. பேராசிரியர் இங்கே ஒரே போடு
சென்னை: எதிர்க்கட்சியினரின் பல்வேறு சூழ்ச்சி, தவறான பரப்புரைகளை விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் முறியடித்து, திமுக வேட்பாளருக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளனர் என்று ஜவாஹிருல்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், உண்மையான போட்டி திமுகவுக்கும், பாமகவுக்கும்தான் என்றே கருதப்பட்டது.. இறுதியில், திமுக அபார வெற்றி பெற்றுள்ள நிலையிமல், பாமக தோல்வி அடைந்துள்ளது.

ஆனாலும், வாக்குக்கு பணம், பொருள் என எதுவுமே தராமல் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக கூறி, பாமகவினரே கொண்டாடி பட்டாசு வெடித்தார்கள். பாமகவுக்கே நிஜமான வெற்றி என்று பூரித்து உள்ளனர்.
பாராட்டு: இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சியினரின் பல்வேறு சூழ்ச்சி, தவறான பரப்புரைகளை விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் முறியடித்துள்ளது குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவாக்கு மகத்தான வெற்றியை வழங்கிய அத்தொகுதி மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல சூழ்ச்சிகள்: இந்த வெற்றி மூன்றரை ஆண்டுக் கால திமுகவின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கும் அங்கீகாரம் ஆகும். இந்த இடைத்தேர்தலில் பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டனர். தவறான பரப்புரைகளையும் அவதூறுகளையும் பேசி வந்தனர். அவற்றையெல்லாம் மக்கள் புறந்தள்ளி வரலாற்று வெற்றியை இந்தியா கூட்டணிக்கு வழங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றி இருப்பது ஒன்றிய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் பறைசாற்றுகிறது. மீண்டும் மீண்டும் இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விடயமாகும்.
நன்றி: விக்கிரவாண்டி வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், களப்பணி ஆற்றிய இந்தியா கூட்டணியின் அத்துணை தோழமைக் கட்சியினருக்கும் என்டிஏ கூட்டணியின் பொய் பரப்புரையைப் புறந்தள்ளி அமோக வெற்றியைப் பதிவு செய்த விக்கிரவாண்டி தொகுதியின் வாக்காளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ந்து சொல்லியிருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications