என் ரூம் சாவியை கொடுங்க.. தமிழக காங்கிரஸ் உள்ளே வெடித்த மோதல்.. அலறிய டெல்லி தலை.. என்ன நடந்தது?
சென்னை: சமீபத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடந்த மோதல் ஒன்று டெல்லி வரை சென்று இருக்கிறது. சிறிய விஷயத்திற்காக நடந்த இந்த மோதல் பூதாகரம் ஆகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல கோஷ்டி மோதல்கள் இருக்கும் நிலையில் தற்போது நடந்த மோதல் லோக்சபா தேர்தல் நேரத்தில் நடந்துள்ளதால் இந்த மோதல் மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் கடந்த வாரம் சென்னை வந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதிப் பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினார்.

மேடையிலேயே மோதல்: மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனையின் போது, கட்சியின் சீனியர்களில் ஒருவரான பொன்.கிருஷ்ணமூர்த்திக்கும் எம்.எல்.ஏ. ரூபிமனோகரனுக்கும் மேடையிலேயே நடந்த வார்த்தை மோதல்கள் அஜோய்குமாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அஜோய்குமார், கே.எஸ். அழகிரி உள்பட காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், சீனியர் நிர்வாகிகள் என பலரும் மேடையில் வீற்றிருந்தனர்.
தேர்தல் தொடர்பாக, மாவட்ட தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மேடையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபிமனோகரன், அழகிரியின் வலது கரமாக இருந்து வரும் சீனியர் நிர்வாகி பொன் கிருஷ்ணமூர்த்தியிடம் எனது அறையின் சாவியைக் கொடுங்கள் ; நீங்கள் எப்படி என் அறை கதவை பூட்டி வைக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.
சத்தியமூர்த்திபவன் சம்பவம்: அதாவது, சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் தலைவர்களுக்கு அறைகள் உண்டு. அதில் கட்சியின் பொருளாளருக்கும் தனி அறை இருக்கிறது. பொருளாளரான ரூபிமனோகரன் நாங்கு நேரியின் எம்.எல்.ஏ.. பொருளாளராக இருந்தும் அவர் சத்தியமூர்த்திபவனுக்கு வருவதே இல்லை. பலமுறை அதனை அவருக்கு நினைவூட்டியபடி சத்திய மூர்த்திபவன் நிர்வாகிகள் இருந்துள்ளனர்.
ஆனாலும், ரூபிமனோகரன் தனது பிஸ்னெஸ் டீலிங்குகளில் தான் கவனம் செலுத்தி வந்தாரே தவிர, சத்தியமூர்த்திபவன் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. இதனால், அழகிரியின் உத்தரவின்பேரில் பொருளாளர் அறையை இழுத்து மூடிவிட்டார் பொன் கிருஷ்ணமூர்த்தி. அஜோய்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடப்பதால் சத்தியமூர்த்திபவனுக்கு வந்த அவர், தனது அறை பூட்டப்பட்டு இருப்பதால் அதன் சாவி பொன் கிருஷ்ணமூர்த்தியிடம் இருப்பதை அறிந்து, அவரிடம் சாவியை கேட்டிருக்கிறார் ரூபிமனோகரன்.
எதற்கு தனி அறை ?: ஆனால், ''கட்சி வேலை பார்க்காமல், சத்தியமூர்த்திபவனுக்கே வராமல் இருக்கும் உங்களுக்கு எதற்கு தனி அறை ? சாவி கொடுக்க முடியாது. வேலையை பாருங்க. தலைவர் கொடுக்கச் சொன்னால் கொடுப்பேன். இல்லைன்னா கிளம்புங்க...'' என்று ஆத்திரமாகப் பேசியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இதனையடுத்து இருவருக்கும் வார்த்தைகள் தடித்துள்ளன. கைகலப்பு, மோதல்கள் வெடிக்குமோ என பயந்து சீனியர்கள் தலையிட்டு பிரச்சனையை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
மேடையில் நடந்த இந்த வார்த்தை மோதல் அஜோய்குமாரை பதட்டமடைய வைத்திருக்கிறது. பிரச்சனை என்ன என்று அவர் விசாரிக்க, பூட்டப்பட்ட அறை, சாவி ஆகிய பஞ்சாயத்துகளை விவரித்திருக்கிறார்கள். அழகிரி தலையிட்டு, அதனை நான் பார்த்துக்கிறேன் ; நீங்க அமைதியா இருங்கள் என்று அஜோய்குமாருக்கு விளக்கமளித்திருக்கிறார். சீனியர்கள் தலையிடாமல் இருந்திருந்தால், மேலிட பொறுப்பாளர் முன்னிலையிலேயே சட்டைகள் கிழிந்திருக்கும். இதுதான். கதர்சட்டைகளிடம் எதிரொலிக்கும் ஹாட் டாக் !












Click it and Unblock the Notifications