ஆளுநருக்கு ஸ்டாலின் வைத்த "பொறியில்".. வாட்டமாக வந்து சிக்கிய எடப்பாடி.. எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அதை மீண்டும் நிறைவேற்றும் விதமாக நேற்று தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டியது. இதில் எடப்பாடி பழனிசாமி எடுத்த நிலைப்பாடு கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.

தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார்
தினசரி ஆவணங்கள், பணி நியமன ஆணைகள், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றில் ஆளுநர் கையொப்பமிடாமல், குறுக்கே நிற்கிறார். அதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றுவது உள்ளிட்ட ஊழல் வழக்குகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் குறுக்கே நிற்கிறார் என்று தமிழ்நாடு அரசு மனுவில் கூறியது.
வழக்கு விசாரணை - சட்டசபை கூட்டம்: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த அமர்வில், தமிழ்நாடு அரசு இங்கே குறிப்பிடும் பிரச்சினைகள் தீவிர கவலையை எழுப்புகின்றன. டிஎன்பிஎஸ்சியில் தலைவர் பதவி உட்பட 14 பதவிகளில் 10 பதவி காலியாக உள்ளது கவலை அளிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். விதி 200ன் கீழ் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. அனுமதி வழங்குதல், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தல், நியமனங்கள் போன்ற பிற விஷயங்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புகிறோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
மீண்டும் சட்டம்: இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். வழக்கு விசாரணைக்கு வரும் முன் அவர் மசோதாக்களை திருப்பி உள்ளார். இதை தற்போது மீண்டும் நிறைவேற்றும் விதமாக நேற்று சிறப்பு கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியது.
இதை திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவோடு 10 மசோதாவும் திருத்தம் இன்றி அப்படியே நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரவு கொடுக்க மறுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், withheld என்று திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்படி அனுப்பிய பின்னர் அந்த மசோதாக்கள் குறித்து மீண்டும் அவையில் விவாதிக்க உரிமை இருக்கிறதா? என்கிற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தார். இதன் மூலம்தான் அவர் ஸ்டாலின் விரித்த பொறியில் சிக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடி கூட்டணி: பாஜக உடன் அதிமுக கூட்டணியை முறித்துவிட்டதாக எடப்பாடிதான் அறிவித்து இருந்தார். அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார்.
அதேபோல் 2024 லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறாராம்.
பாஜக ஆதரவு நிலைப்பாடு: இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி நேற்று ஆளுநரை எதிர்க்காமல் பின் வாங்கி உள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுகவினர்.. எடப்பாடி ஸ்டாலின் விரித்த பொறியில் சிக்கி உள்ளார். ஆளுநருக்கு விரித்த பொறியில் இவர் சிக்கிவிட்டார். எடப்பாடி 10 மசோதாக்களை ஆதரித்து இருக்க வேண்டும்.
அதில் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு ஜெயலலிதா பெயர் வைத்ததும் அடங்கும். ஆனால் அதை கூட ஏற்காமல் எடப்பாடி வெளிநடப்பு செய்துள்ளார். அவர் பாஜகவுடன் ரகசிய கூட்டில் இருப்பது இதிலேயே தெரிகிறது. பாஜக - எடப்பாடி ரகசிய உறவு வெளியாகிவிட்டது. இனி திமுக கூட்டணி கட்சிகள் தப்பித்துக்கொள்ளும். சிக்கல் இல்லை.
எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது. அதற்கு இதுதான் சான்று என்று திமுகவினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications