இது வீடா கஞ்சா குடோனா.. கணவர், மனைவியை கொத்தாக அள்ளிய செங்கல்பட்டு போலீஸ்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணவர் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் இருந்த 2.350 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா உள்ளிட்டப் போதைப் பொருட்களின் விற்பனையும், புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கும்பல், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் புழகத்திற்கு, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக, அக்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து, தமிழகத்தில் கஞ்சா பயன்பாட்டை ஒழித்துக்கட்டும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்டப் போதைப் பொருட்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசாருடன், தமிழக போலீசாரும் இணைந்து, ஆந்திரா, குஜராத் போன்ற தமிழகம் வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொதண்டு, கஞ்சாவை கடத்தி வரும் நபர்களை, கையும், களவுமாக பிடித்து வருவதோடு, கஞ்சா உள்ளிட்டப் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசாரின் பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி, ஆங்காங்கே கஞ்சா கடத்தப்படுவதும், ரகசியமாக விற்பனை செய்யப்படுவதும், கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டில், வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்து வந்த கணவர் மற்றும் மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு தண்டுகரை, ஆண்டாள் நகரில் வசிப்பவர் வின்சென்ட். இவரது மனைவி ஜமுனா. இந்நிலையில், இருவரும் வீட்டில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் தலைமையில் சோதனை செய்தனர்.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அவர்கள் வீட்டில் இருந்து 2.350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த கணவர், மனைவியையும் கைது செய்தனர். இருவரையும் கைது செய்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், கணவர், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணவர் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications