நான் உள்துறை செயலாளரின் டிரைவர்.. சென்னையில் போக்குவரத்து போலீசை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர்.. அடாவடி
சென்னை: சென்னை குரோம்பேட்டை சிக்னலில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவை நகர்த்த கூறிய போக்குவரத்து போலீஸ்காரரிடம், ‛‛நான் தான் உள்துறை செயலாளரின் டிரைவர்'' என ஆட்டோ டிரைவர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஜிஎஸ்டி சாலை - தாம்பரம் ரோட்டில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குரோம்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது.

இதை கவனித்த போக்குவரத்து போலீஸ்காரர், ஆட்டோவை அங்கிருந்து ஓட்டிச்செல்லும்படி கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கேட்கவில்லை. அவர் போக்குவரத்து போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தான் சென்னை குரோம்பேட்டையில் சாலையின் நடுவே ஆட்டோவை நிறுத்தி ஒருவர் பேசி கொண்டிருந்தார். இது போக்குவரத்து இடையூறாக அமைந்தது. இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஆட்டோவை எடுக்கும்படி கூறினார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர்,‛‛பேசிக்கிட்டு இருந்தேன்'' என்றார். அதற்கு போக்குவரத்து காவலர், ‛‛ஓரமா நின்னு பேசுங்கள்.. நடுரோட்டில் நின்று பேசாதீர்கள்'' என்றார்.
அதற்கு ஆட்டோ டிரைவர், ‛‛பேசிக்கிட்டு தான் இருந்தேன்'' என்றார். இதையடுத்து போலீஸ்காரர், ‛‛நீங்கள் இப்போது வருகிறீர்கள் தலைவரே.. நான் காலை 6 மணி முதல் நின்று கொண்டிருக்கிறேன். சும்மா கிடையாது. ஓரமா வாருங்கள் என்றால், ஓரமா வாருங்கள். உங்களிடம் தவறாக ஏதாவது பேசினேனா'' என்றார்.
அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர், ‛‛தலைவா.. நான் யார் தெரியுமா?'' என்றார். அதற்கு போலீஸ்காரர், ‛‛நீங்கள் யாராக வேண்டுமானால் இருங்க'' என்றார். இதை கேட்டதும் டென்ஷனான ஆட்டோ ஓட்டுநர், ‛‛நான் உள்துறை செயலாளரின் ஓட்டுநர்'' என்றார். அதற்கு போலீஸ்காரர், ‛‛இருக்கட்டுங்க.. என்னங்க செய்வீங்க.. டிரான்ஸ்பர் பண்ணுவீங்களா?'' என்றார். இதையடுத்து பம்மிய ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications