'இந்துக்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி தான்'.. ஜாமீனில் விடுதலையான கனல் கண்ணன் பேட்டி!
சென்னை: பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து வெளிவந்த அவருக்கு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய கனல் கண்ணன், இந்துக்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி தான் என்றார்.
சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் சார்பாக ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார்.

சர்ச்சைக்குரிய பேச்சு
அப்போது அவர் பேசுகையில், ''ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்'' என்று மூன்று முறை கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ''இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.

கனல் கண்ணன் கைது
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செய்லபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி மனு தாக்க செய்தார். இந்த வழக்கை ஆகஸ்டு 11-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இருந்த கனல் கண்ணனை போலீசார் கடந்த மாதம் 15-ஆம் தேதி கைது செய்தனர்.

உயர் நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து கனல் கண்ணனுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களுக்காக போராடுவேன்
அப்போது, தேவையற்ற கருத்துகளை யூ.டியூப்-ல் பேசுவது பேஷனாகி விட்டதாக நீதிபதி கருத்த தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன் பின்னர் நேற்று மாலை கனல் கண்ணல் நிபந்தனை ஜாமீனில் புழல் சிறையில் இந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது புழல் சிறைக்கு வெளியே அவருக்கு இந்து முன்னணி அமைப்பு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கனல் கண்ணன் இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி தான் என்றும், தொடர்ந்து இந்துக்களுக்காக பணியாற்றுவேன் என்றும் போராடுவேன் என்றும் பேசினார்.

இந்து மக்களின் வீரமே வெல்லும்..
ஓம் காளி... ஜெய் காளி.. பாரத் மாதா கி ஜெய் என்றும்.. தொடர்ந்து இந்து மக்களின் வீரமே வெல்லும்.. என்றும் கனல் கண்ணன் பேசினார். தொடர்ந்து அவர், இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்.. தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும்.. இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி தான்.. என்று பேசினார். கடவுள் விஷ்ணு குறித்து சீமான் பேசியது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இப்போது இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications