செல்வப்பெருந்தகை எந்த கட்சியில் இருக்கார்.. விஸ்வநாதன் ஒரே போடு.. காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம்
சென்னை: திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தற்போது தவெக கூட்டணியில் உள்ளது. தவெக அரசின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவை விமர்சிக்கிறார்கள். இதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுட்டிக் காட்டினார். தவெக மற்றும் விஜய் குறித்து செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் செல்வப்பெருந்தகை மீது அமைச்சர் விஸ்வநாதன் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, "தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. திரைப்படத்தில் அவர் என்னென்ன வசனம் பேசினாரோ, அதை செயல்படுத்த முடியாது என்பதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன. சினிமா வேறு பொது வாழ்க்கை வேறு. அதற்கு இந்த ஆறு மாதம் ஆட்சி ஒரு சாட்சி. ஆகவே சட்டம் ஒழுங்கை பலப்படுத்த வேண்டும். குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

சோனியாகாந்தி புத்தகம்
தவெக கூட்டணியி்ல் இருந்து கொண்டே செல்வப்பெருந்தகை இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சரும், காங்கிரஸ் நிர்வாகியுமான விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் பேரியக்க தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தகம், உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியளவு உள்ள அரசியல் தலைவர்கள், உலகளவில் உள்ள பெரிய அரசியல் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தி எழுதிய புத்தகத்தை வாங்கி விரும்பி படிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் விஜய்
அதனால் இந்தியாவில் இருக்கிற காங்கிரஸ் ஆளுகிற மாநிலத்தின் முதலமைச்சர்கள், கூட்டணியில் உள்ள முதலமைச்சர்கள், அநேகமாக திங்கள்கிழமை டெல்லியில் நடக்கிற ஆய்வு கூட்டத்திற்காக செல்கிறார்கள். அந்த அடிப்படையில் தமிழகத்தி்ன் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளக்கூடும் என கருதுகிறன். அதற்காக தான் காங்கிரஸ் ஆளுகிற மாநிலத்தின் முதலமைச்சர்கள், கூட்டணியில் உள்ள முதலமைச்சர்களை அழைத்துள்ளனர்.
எந்தக் கட்சியில் செல்வப்பெருந்தகை
இதையொட்டி டெல்லி பயணம் இருக்கும் என கருதுகிறேன். செல்வப்பெருந்தகை சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று எந்த கட்சியில் இருந்து பேசுகிறார் என தெரியவில்லை. இப்போது அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் எந்தக் கட்சிக்கு செல்ல போகிறார் என்றும் தெரியவில்லை. முதலில் அவர் எந்தக் கட்சிக்கு போகப் போகிறார் என்பதை சொல்லட்டும். அதன் பிறகு அவர் சொல்வதற்கு பதில் கூறுகிறேன்" என்றார். விஸ்வநாதன் கருத்து காங்கிரஸில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
