செங்கோட்டையன் டெல்லி சென்றிருக்கிறாரா? எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்ஷன்.. நோட் பண்ணுங்க!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் ரியாக்ஷன் அதிமுகவினர் இடையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கூட தெரியாமல் செங்கோட்டையன் மறைமுகமாக டெல்லிக்கு சென்றது ஏன் என்று விவாதித்து வருகின்றனர்.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக அலுவலகத்தை பார்வையிட சென்றதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, பின்னர் 3 கார்களில் மாறி சென்று அமித் ஷாவை சந்தித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி காலையில் டெல்லி புறப்பட்ட போதே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையிலேயே இந்த விஷயத்தை போட்டு உடைத்தார்.

அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா இடையிலான சந்திப்பு புகைப்படங்கள் வெளியாகியது. அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இரு தரப்புமே கூட்டணி தொடர்பாக இதுவரை உறுதி செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமித் ஷாவிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் அண்ணாமலை
இந்த நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து டெல்லி சென்றுள்ள அவர், ஒரே நாளில் மீண்டும் அவசர அவசரமாக தமிழ்நாடு திரும்பி இருக்கிறார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.
இபிஎஸ் - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணித்த போது விஷயம் வெளி வந்த நிலையில், செங்கோட்டையன் டெல்லி பயணித்து திரும்பிய பின்னரே இந்த சந்திப்பு குறித்து தெரிய வந்துள்ளது. ரகசியமாக சென்று சந்திப்பு நடத்துவதில் எடப்பாடி பழனிசாமியை விடவும் செங்கோட்டையன் கில்லாடி என்பதை நிரூபித்திருக்கிறார். இதனிடையே செங்கோட்டையனுக்கு மத்திய அரசின் முக்கிய பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி பதில்
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை திறந்து வைத்து மக்களுக்கு தர்பூசணி பழங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, செங்கோட்டையனின் டெல்லி பயணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.
அதிமுகவினர் குழப்பம்
இதனால் அதிமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் செங்கோட்டையன் டெல்லி பயணித்திருப்பது ஏன் என்று விவாதித்து வருகின்றனர். கொங்கு மண்டலத்தின் மூத்த முக்கிய அதிமுக நிர்வாகியான செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications