அப்பாவை மிஸ் பண்ணுறேன்.. கருணாநிதி குறித்து பேசிய ஸ்டாலின்.. மேடையிலேயே கண்ணீர்விட்டு.. உருக்கம்!
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு குறித்தும், அவரின் இறுதி சடங்கிற்காக நடந்த சட்ட போராட்டங்கள் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.இன்றுதான் பிரச்சாரம் மேற்கொள்ள கடைசி நாள் என்பதால் சென்னையில் பல்வேறு தொகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்திற்கு இடையே "ஸ்டாலின் செய்வாரா" என்ற பெயரில் சன் டிவி நடத்திய நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களின் கேள்விக்கு ஸ்டாலின் சுவாரசியமாக பதில் அளித்தார்.

நீட்
இதில் நீட் குறித்து பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் எதிர்க்கப்படும். ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக நீட் தடை செய்யப்படும். இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று ஸ்டாலின் கூறினார். மேலும் பேசிய ஸ்டாலின், கல்விக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுப்போம். அதிமுக ஆட்சியில் கல்வி கெட்டுவிட்டது. அதை மீட்டு எடுப்பதே எங்களின் நோக்கம்.திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கும்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி சம்பவத்தை விசாரிப்போம். இது போன்ற சம்பவங்களை இனி நடக்கவே விட மாட்டேன். இதுதான் என்னுடைய முதல் குறிக்கோள். யார் சட்ட ஒழுங்கை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் . கரப்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை அமைப்பதே என்னுடைய நோக்கம். எல்லா துறையிலும் நேர்மையாக இருப்பதே என்னுடைய ஆட்சியின் நோக்கம்.

கடன்
தமிழகம் மிகப்பெரிய கடனில் உள்ளது. கடன் சுமையை குறைக்க நிபுணர் குழு அமைப்பேன். இதற்கான திட்டங்களை வகுத்து இருக்கிறோம். முறையாக செயல்பட்டால் கடனை அடைக்க முடியும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலினிடம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்பாவை மிஸ் செய்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அப்பா
இதற்கு மிகவும் உருக்கமான பதில் அளித்த ஸ்டாலின், அப்பாவை எப்படி மிஸ் செய்யாமல் இருப்பேன். அவரின் மறைவுக்கு பின் , அவரை பற்றி நினைக்காத நாளே இல்லை. தேர்தல் என்றாலே அப்பா மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். நிறைய பணிகளை செய்வார். வீடே விறுவிறுப்பாக இருக்கும். தேர்தல் நேரத்தில் தினமும் போன் செய்வார்.

கடைசி ஆசை
இப்போது அவர் இல்லாதது வருத்தம் தருகிறது. அவர் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். தலைவர் இறந்த போது, அவரின் கடைசி ஆசையாக , மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். முறையாக இதற்கு அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. கவுரத்தை விட்டு குடும்பத்தோடு சென்று கேட்டும் முதல்வர் எங்கள் கோரிக்கையை கேட்கவில்லை.

கோரிக்கை
உடலை புதைக்க அனுமதி இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனோம். நாங்கள் எல்லாம் அப்போது உடைந்து போனோம். இதற்காக சட்ட போராட்டங்களை நடத்தினோம். தீர்ப்பு வரும் வரை எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை.

அனுமதி
கடைசியில் பெரும் போராட்டங்களுக்கு பின் மெரினாவில் உடலை புதைக்க அனுமதி கிடைத்தது. அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது... என்று கூறிய ஸ்டாலின் அந்த நிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர்விட்டார். அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த போராட்டத்தை நடத்தினோம் என்று கூறி ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியிலேயே லேசாக கண்ணீர்விட்டார். மறைந்த தலைவர் கருணாநிதி குறித்த ஸ்டாலினின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications