EXCLUSIVE: மோடி ராமநாதபுரத்தில் வந்து போட்டியிட்டாலும் வீழ்த்துவேன்.. நவாஸ் கனி எம்பி அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் இங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து நின்று வெற்றிபெறுவோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி தெரிவித்து உள்ளார்

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் என தெலுங்கானாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் 11 மாநில பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பலர் விருப்பம் தெரிவித்ததாக முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

 I will defeat PM Narendra Modi if he contest in Ramanathapuram - Nawas Kani

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் நவாஸ் கனியிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் சில கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.

கேள்வி: பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று தெலுங்கானாவில் ஜேபி நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அது பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த தொகுதியின் எம்பியாக இருக்கும் உங்கள் பார்வை என்ன?

நவாஸ் கனி: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள சூழல் குறித்து அவர்களுக்கு எல்லா தகவல்களும் சென்று இருக்கும். அதையெல்லாம் அவர்கள் கருத்தில் கொள்வார்கள்.

கேள்வி: மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று பாஜகவினர் சொல்வதற்கான காரணம் என்ன? எத்தனையோ மாநிலங்கள் இருக்கும்போது தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புவது ஏன்?

நவாஸ் கனி: ராமநாதபுரம் என்பது காசிக்கு அடுத்தபடியாக இந்துக்களின் புனித தலமாக விளங்குகிறது. எனவே இங்கு போட்டியிடலாம் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்புகள் குறைவு. இங்குள்ள நிலவரம் வேறு. ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி இங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் ஒதுக்கப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன்.

பிரதமர் நரேந்திர மோடி இங்கு வெற்றிபெற்றால் தொகுதிக்கு நிறைய நலத்திட்டங்கள் வரும் என்று சொல்வார்கள். ஆனால், பிரதமர் ராமநாதபுரத்திலேயே போட்டியிட்டாலும், வட மாநிலத்தில் வேறொரு தொகுதியிலும் போட்டியிடுவார். 2 தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்வார். எனவே ராமநாதபுரத்தில் அவருக்கு வாக்களித்தும் பலன் இல்லை. முடிந்தால் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறட்டும்.

கேள்வி: காசிக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் இந்துக்களின் புனித தலமாக உள்ளது என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள்தான் எம்பிக்களாக உள்ளனர். 2014 முதல் 2019 வரை திரு.அன்வர் ராஜா அவர்களும், கடந்த 4 ஆண்டுகளாக நீங்களும் எம்பியாக உள்ளீர்களே.

 I will defeat PM Narendra Modi if he contest in Ramanathapuram - Nawas Kani

நவாஸ் கனி: ராமநாதபுரம் என்பது மதநல்லிணக்க மண். இங்கு மத ரீதியாக மக்கள் வாக்குகளை அளிப்பது கிடையாது. இதற்கு முன் ஜேகே ரிதீஷ் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். முஹம்மது ஷரீப் அவர்கள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்கள்.

மதத்தின் அடிப்படையில் இங்கு எதுவும் செய்ய முடியாது. கள நிலவரம் என்பது வேறாக உள்ளது. மக்கள் ஆதரவு எங்களுக்கே உள்ளது. பிரதமர் மோடி போட்டியிட்டாலும் சரி, அல்லது நயினார் நாகேந்திரனே நிறுத்தப்பட்டாலும் சரி, நாங்கள் வெற்றிபெறுவோம்.

கேள்வி: கடந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் 32.16 சதவீத வாக்குகளை பெற்றார். நீங்கள் 44.08 சதவீத வாக்குகளை பெற்றீர்கள். அதில் அமமுக அதிமுகவின் வாக்குகளை பிரித்து சென்றது. அடுத்தடுத்த தேர்தல்களில் அமமுகவின் வாக்கு வங்கி குறைந்து அதிமுகவுக்கே சென்றுள்ளது. இந்த சூழலில் மோடி இங்கு போட்டியிடும்போது மேலும் அதிக வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறதே. அது ஒரு கடும் போட்டியாக ஆகாதா?

நவாஸ் கனி: நயினார் நாகேந்திரன் அவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் வாக்குகள் கிடைத்தன. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டாலும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு வாக்குகள் கிடைக்காது. சசிகலா ஆதரவு வாக்குகளும் அவர்களுக்கு விழாது. முக்குலத்தோர் சமுதாயத்தினர் அவர்களை புறக்கணிப்பார்கள். எனவே வெற்றி வாய்ப்பு குறைவு. பாஜக ஆட்சி செய்தால் சாதி மத பிரச்சனைகள் ஏற்படும்.

இப்போதுகூட பாருங்கள். பாஜக ஆட்சியில் இருக்கும் மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. வன்முறையின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை மணிப்பூர் சந்தித்து உள்ளது. 4 முஸ்லிம் லீக் எம்பிக்களும் தற்போது மணிப்பூருக்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அப்பகுதியில் ஆய்வு செய்தோம். தற்போது ஆய்வை முடித்துவிட்டு கிளம்பி இருக்கிறோம். தற்போதுகூட கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றுகொண்டுதான் பேசுகிறேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+