என்ன இப்படி சொல்லிவிட்டார் ரஜினி.. சுற்றுப்பயணம் இல்லையாமே.. பின்னணி என்ன!
சென்னை: அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி காந்த், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
கொரோனா காலம் என்பதால் தொற்று பாதிப்பை அதிகரிக்கும் என்பதால் மக்களை நேரடியாக சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒருவழியாக நடிகர் ரஜினிகாந்த் அரசயலில் களம் காணப்போவதை இன்று அறிவித்துள்ளார்.

ரஜினி ட்வீட்
ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறியிருந்தார்.

ரசிகர்கள் உற்சாகம்
இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்மையில் தான் தன்னுடைய தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து அவர்களின் மனநிலையை அறிந்தார். அப்போதே ரஜினி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இதன்படியே அரசியல் கட்சி ஜனவரியில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்,

அரசியலுக்கு வருவேன்
இந்நிலையில் ரஜினியின் ட்விட் பதிவை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரை சந்திக்க போயஸ் இல்லம் முன்பு குவிந்தனர். அவர்களை சந்தித்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கிய ரஜினிகாந்த், 2017 டிசம்பர் 31 அன்று
அரசியலுக்கு வருவேன் என்று கூறினார் ; ஜனவரியில் கண்டிப்பாக கட்சி தொடங்குவேன் என்றார்.

சுற்றுப்பயணம் இல்லை
கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இயலாது என்று கூறிய ரஜினி, தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான் என்றார். அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார். சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் சுற்றுப்பணம் இல்லை என்று கூறியுள்ளார். கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால் சுற்றுப்பயணம் இல்லை என்று ரஜினி பேட்டியின் போது குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications