பிரதமர் ஆசை இருக்கே.. முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தி கிளாஸ் எடுக்க நான் ரெடி.. குஷ்பு பரபர பேச்சு!
அண்ணாமலை பார்க்காத கேஸா? அவர் மீது போய் வழக்கு போடுகிறார்கள் என குஷ்பு பேசியுள்ளார்.
சென்னை : "பிரதமராகும் ஆசை உள்ளவர் முதல்வர் ஸ்டாலின். எனவே இப்போதிருந்தே கூட இந்தி கற்றுக்கொண்டிருந்தாலும் இருப்பார். வேண்டுமென்றால் சொல்லுங்கள், எனக்கு இந்தி தெரியும்.. உங்களுக்கு இந்தி கிளாஸ் எடுக்கிறேன்." என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசியுள்ளார்.
வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அறிக்கை விட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திமுக அரசு பொய் வழக்குகள் போடுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். திமுக அரசைக் கண்டித்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆர்ப்பாட்டம்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன முழக்கம்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். பாஜக மாநில துணை தலைவர்கள் கரு. நாகராஜன் தலைமையில், நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.

அண்ணாமலை பார்க்காத கேஸா
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, "திமுகவைப் பார்த்து கேட்கிறேன்.. யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்? அண்ணாமலை மீது கேஸ் போடுகிறார்கள். அவர் பார்க்காத கேஸா? இல்லை, அண்ணாமலை சட்டம் தெரியாதவரா.. சட்டத்தை படித்து இறங்கி வேலை பார்த்தவர்தான் அண்ணாமலை. அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அது பாஜகவால்தான் முடியும். அண்ணாமலை மீது உள்ள நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது.

எங்க அகராதியிலேயே இல்லை
இது தானா சேரும் கூட்டம். காசு கொடுத்து கூட்டும் கூட்டம் அல்ல. வடமாநில மக்கள் குறித்து பேசியது யார்? பானி பூரி விற்கத்தான் லாயக்கு' என்று சொன்னது யார்? கக்கூஸ் கழுவுவதுதான் இவர்கள் வேலை' எனச் சொன்னது யார்... இந்தி தெரியாது போடா' என்றது யார்? 24 மணி நேரத்தில் கைதுசெய்யுங்கள் என்றார். கைது செய்ய வேண்டியதுதானே. அவர் எதற்கும் அஞ்ச மாட்டார். பயம் என்பது பாஜக அகராதியிலேயே இல்லை. மடியில் கனம் இருந்தால் தானே பயம் இருக்கும்.

இந்தி கிளாஸ் எடுக்கட்டுமா?
தமிழ் மக்கள், தமிழ்நாடு, தமிழ் மொழி எனப் பிரதமர் பேசி வருகிறார். ஆனால் இங்கே, இந்தித் திணிப்பு என மக்களை திசை திருப்புகிறார்கள். நீங்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் இரண்டாவது மொழியாக இந்தி இருக்கிறது. பிரதமராகும் ஆசை உள்ளவர் முதல்வர் ஸ்டாலின். எனவே இப்போதிருந்தே கூட அவர் இந்தி கற்றுக்கொண்டிருந்தாலும் இருப்பார். வேண்டுமென்றால் சொல்லுங்கள், எனக்கு இந்தி தெரியும்.. உங்களுக்கு இந்தி கிளாஸ் எடுக்கிறேன். இந்தி எப்படி எழுத வேண்டும், படிக்க வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன்.

ஊழல் இல்லாத ஆட்சி
எந்த ஊழலும் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு இருக்கிறது. அவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யுங்கள். ஒரு குரல் கொடுத்தால் அடங்கி உட்காருபவர்கள் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும்" என ஆக்ரோஷமாகப் பேசினார் குஷ்பு.












Click it and Unblock the Notifications