வேளச்சேரி ஸ்டேஷனில் கூட்டத்தை பார்த்தீங்களா.. இத்தனை லட்சம் பேரா? தெற்கு ரயில்வே சொன்னது என்ன
சென்னை: சென்னையில் நடந்த விமான சாகசத்தையொட்டி பறக்கும் ரயிலில் இன்று அதிகளவில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். மும்பை மின்சார ரயில்களில் இருந்த கூட்டத்தை விட ஒருபடி அதிகம் என்று சொல்லும் வகையில் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டமும் எத்தனை பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்ற தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த 1932 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது. தற்போது 93 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படை அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து இன்று சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை தினமானது ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தான் இன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. மதியம் 1 மணி வரை நடந்த இந்த விமான சாகச கண்காட்சியில், இந்திய விமானப் படையின் 72 வகை விமானங்கள் பங்கேற்றன. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் பல்டி அடித்துது சாகசம் காட்டியது, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்களை நிகழ்த்தின.
இந்த சாகச நிகழ்ச்சியினை சுமார் 15 லட்சம் பேர் சென்னை மெரினாவில் கண்டுகளித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்தது. விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் பிரமிக்கும் வகையில் இருந்தது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை மெரினாவுக்கு படையெடுத்தனர். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புறநகர் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகள் நிற்க கூட முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. மும்பை புறநகர் ரயில்களில் ஏறுவதற்கு கூட்டம் எந்த அளவு காணப்படுமோ அதை விட ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோன்று நிகழ்ச்சி முடிந்த பிறகும் புறநகர் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை சென்ற ரயில்களில் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் குறிப்பாக மாலை 4.30 மணி வரை மட்டும் சென்னை பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "சென்னையில் நடந்த விமான சாகசத்தையொட்டி பறக்கும் ரயிலில் இன்று அதிகளவில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டன. வழக்கமாக பறக்கும் ரயிலிலை 55 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். ஆனால் இன்று ஒரே நாளில் மட்டும் குறிப்பாக மாலை 4.30 மணி வரை 3 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் கால் வைக்க கூட முடியாத அளவுக்கு இருந்த கூட்டத்தில் கைக்குழந்தைகளோடும், சிறுவர் சிறுமிகளோடு வந்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோன்று சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கி கடும் அவதியடைந்தனர். சாகச நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு கிளம்பினர். பல லட்சம் பேர் ஒன்றாக புறப்பட்டு சென்றதால், கடற்கரையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி 230-க்கும் அதிகமானவர்கள் வாந்தி எடுத்ததாகவும், 93 பேர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று சிலருக்கு அங்கேயே உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.












Click it and Unblock the Notifications