‘நான் ஆஃப் ஸ்பின்னர்.. கலைஞருக்கு பெளலிங்.. சிம்பு விக்கெட்..கிரிக்கெட் குறித்து நெகிழ்ந்த ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் உரையாடினார். அப்போது விளையாட்டுத்துறை வீரர், வீராங்கனைகள் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார். பலரும் தங்களுக்கு அரசு செய்த உதவிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள்.
மு.க ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சாதனைகளை கூறியதுடன், தன் இளமை பருவ விளையாட்டு நினைவுகளை நாஸ்டாலஜியாக பகிர்ந்துள்ளார். "கிரிக்கெட் மீது பைத்தியமாக இருந்தேன். நான் ஆஃப் ஸ்பின்னர். கலைஞருக்கு பந்து வீசியுள்ளேன். நடிகர்கள் கிரிக்கெட் போட்டியில் சிம்பு, நெப்போலியன் உள்ளிட்டோர் விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன்." என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தன் தந்தையை போல கபில்தேவ் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

அப்போது ஸ்டாலின், "என் தலைமையில் ஆட்சிக்கு வந்து 4.5 வருடங்கள் ஆகின்றன. அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவது உங்களுக்கே தெரியும். விளையாட்டுத்துறையிலும் எல்லா மாநிலங்களையும் விஞ்சுமளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்காக தான் உதயநிதியை விளையாட்டுத்துறை அமைச்சராக்கினேன். அவர் அனைவரும் பாராட்டும் வகையில் செயல்படுவது உங்களுக்கே தெரியும். அதன் தொடர்ச்சியாக தான அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம்.
ஸ்ட்ரீட் கிரிக்கெட்
இப்போது வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள விளையாட்டுத்துறையினரிடம் பேசி, சர்வதேச ஹாக்கி போட்டி உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளோம். இது தொடரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் என்னுடைய 14 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அப்போதிருந்தே அதிக டென்ஷன் இருக்கும். ஏதாவது டென்ஷன் ஆக்கும் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கும். அதைப்பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். அதிகம் பிரசர் ஏற்படும்போது புத்தகங்கள் படிப்பது, பாட்டு கேட்பது, டிவி பார்ப்பது, வாக்கிங் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன்.
நான் பள்ளி படிக்கும்போது ஹாக்கி டீமில் இருந்துள்ளேன். கிரிக்கெட்டும் பிடிக்கும். சின்ன வயதில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். புக் கிரிக்கெட் அதிகம் விளையாண்டுள்ளேன். வகுப்பு நடக்கும்போது அப்படி விளையாடினேன். இப்போதும் வாய்ப்பு கிடைக்கும்போது கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதில் எனக்கு மிகவும் ஆசை. எங்காவது சாலையில் யாராவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களிடம் பேட் வாங்கி நான் விளையாடியுள்ளேன்.
சிம்பு விக்கெட்
சேப்பாக்கத்தில் நடிகர்கள் கிரிக்கெட் போட்டியில் நான் பௌலிங் போட்டு 3 விக்கெட்கள் வீழ்த்தினேன். எங்களுக்கு எதிரணியில் விளையாடிய சிலம்பரசன், நெல்போலியன் உள்ளிட்ட 3 பேரின் விக்கெட்களை ஆஃப் பிரேக் பௌலிங் போட்டு விக்கெட் எடுத்தேன். இப்படி ஒரு காலத்தில் நான் கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன். நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கலைஞர் கருணாநிதி விளையாட நான் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை கபில்தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி பிடிக்கும். கபில்தேவ் சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வளர்ந்தவர். இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்த முதல் கேப்டன் அவர். தோனியின் கேப்டன் ஷிப் எனக்கு பிடிக்கும். சிறந்த வழிகாட்டியாக உள்ளார். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்கள் எல்லோரையும் பிடிக்கும்." என்றார்.
Like Father..Like Son
இதேபோல அவரின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியும் தீவிர கிரிக்கெட் ரசிகர் ஆவார். கபில்தேவை மிகவும் பிடிக்கும் என்று ஒருமுறை கருணாநிதி கூறியுள்ளார். அவரை போலவே ஸ்டாலினும் கபில்தேவ் மற்றும் கிரிக்கெட் நினைவுகள் பற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications