நம்பர் பிளேட்டில் ஸ்ட்டிக்கர் இருக்கா? சென்னையில் இன்று முதல் அபராதம் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று முதல் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த பெயர்கள் மற்றும் அதற்கான லோகோவை ஸ்டிக்கர்களாக தங்களின் வாகனங்களில் ஓட்டுகின்றனர். குறிப்பாக பலரும் நம்பர் பிளேட்டுகளில் இந்த ஸ்ட்டிக்கரை ஒட்டுகின்றனர்.

இது விதிமீறலாகும். அதாவது நம்பர் பிளேட்டுகளில் விதிகளின்படி ஆங்கில எழுத்து மற்றும் நம்பர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதில் வேறு விஷயங்கள் இடம்பெறக்கூடாது.
இந்நிலையில் தான் வாகனங்களின் முன்பகுதி மற்றும் நம்பர் பிளேட்டுகளில் இத்தகைய ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மே 2ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கான அறிவிப்பு என்பது கடந்த மாதம் 27 ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் ஸ்டிக்கர்களை அகற்ற 28, 29 30, மே மாதம் 1ம் தேதி என மொத்தம் 4 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இந்த காலஅவகாசம் என்பது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் தனியார் வாகனங்களின் வாகன எண் பலகையில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் இருந்தால் இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று முதல் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, இரண்டாவது தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்னளர்.
முன்னதாக இந்த அறிவிப்புக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதாவது வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை கூறுகையில், ‛‛ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில், ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம்.
மேலும் அவர்கள் அரசு அங்கீகாரம் பற்ற அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். யூ டியூப்பர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications