‘அதிமுக அவ்வளவுதான்.. இனி தமிழ்நாடு அரசியல் திமுக Vs தவெக.. திருமாவளவன் பரபரப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வலுவான கூட்டணியுடன் எதிர்கொள்ளவுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் விசிக முக்கியமானது. விசிகவுக்கு அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. அந்தக் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள நேர்காணலில், தமிழ்நாடு அரசியல் திமுக Vs தவெக ஆக மாற வாய்ப்புள்ளது. திமுக, அதிமுகவில் உள்ள சில தலைவர்களே விசிகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக அவர் வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சிகள் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுகவும் முயற்சி செய்து வருகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சி கூட்டணிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக Vs தவெக
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவுக்கு ஆபத்து. மகாராஷ்டிராவில் செய்ததை போல பாஜக பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதே பாணியில் தமிழ்நாட்டில் இரண்டாம் இடம் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவுடன் கூட்டணியை தொடரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருக்கிறது.
பாஜக நினைப்பது மட்டும் நடந்துவிட்டால், தமிழ்நாடு அரசியல் திமுக Vs பாஜக அல்லது திமுக Vs தவெக என்ற நிலைக்கு மாற வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தவெக காரணமாக அதிமுகவுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திமுகவுக்கு எதிரான சிறுபான்மை வாக்குகளை பிரிக்கும் கருவியாக விஜய்யை பாஜக பார்க்கிறது.
அதிமுகவுக்கு இழப்பு
விஜய் வருகையால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே சவால்கள் இருக்கின்றன. அதிமுகவுக்கே அதிக இழப்பு ஏற்படும். இதை உணர்ந்து அதிமுகவினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிமுக தொண்டர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். எம்ஜிஆரால் கட்டமைக்கப்பட்டு, அதிமுக ஈர்த்து வந்த வாக்கு வங்கி விஜய் கவர்ச்சியால் இழக்க நேரிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கரூர் துயர சம்பவம் விஜய் அரசியல் பிம்பம் மீது ஏற்பட்ட கறை. அது அவரை தொடர்ந்து வேட்டையாடும். விஜய்யின் புகழை மறுக்க முடியாது. அதேநேரத்தில் கரூர் துயர சம்பவம் விஜய்யின் தலைத்துவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தலைமைத்துவம் என்பது நெருக்கடிகளை திறம்பட கையாள்வதில் உள்ளது. கரூர் விஷயத்தில் விஜய்யின் எதிர்வினை ஏமாற்றமளிப்பதுடன் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. திமுக, அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கே விசிகவுக்கு எதிரான சமூக மன நிலையுடன் உள்ளனர்.
விசிகவுக்கு எதிரான மனநிலை
விசிகவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, கூட்டணியின் சமநிலையை பாதிக்கும் என்று திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பயப்படுகின்றன. அரசியல் ரீதியாக இருப்பதை விட, உளவியல் ரீதியாக இந்த அச்சம் அதிகம் இருக்கிறது. கூட்டணியின் சமூக நிலையை உணர்ந்துள்ளேன். மதச்சார்பின்மையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணியில் தொடர்வதுடன், கட்சியை வளர்க்க உரிய முக்கியத்துவம் வாய்ந்த நோக்கமாக வைத்துள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications