‛நண்பன் பட பந்தம்’.. விஜயின் தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலம்? கவனம் பெறும் நடிகர் ஜீவா!
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் ஜீவா சொன்ன பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை மையப்படுத்தி அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். இதனை நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தபோதே சொல்லிவிட்டார்.

நடிகர் விஜய் தனது கட்சி பற்றிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அதன்பிறகு 8 மாதங்களாகியும் நடிகர் விஜய் இன்னும் முழுமையாக அரசியல் பேசவில்லை. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்தவில் சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சியில் மட்டுமே நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்பட லேசாக அரசியல் பேசினார்.
மற்றபடி தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் மட்டுமே பதிவுகள், அறிக்கைகளை வெளியிட்டு நடிகர் விஜய் அரசியல் செய்து வருகிறார். இதற்கிடையே தான் சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்தார். அந்த கொடி பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த கொடிக்கான விளக்கத்தை நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் தெரிவிக்க உள்ளார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது வரும் 27 ம்தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடிகர் விஜய் அன்றைய தினம் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார். தற்போது மாநாட்டுக்கான பணிகளை கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசும் கருத்துகளை எதிர்நோக்கி அவரது தொண்டர்கள் காத்துள்ளனர்.
மேலும் நடிகர் விஜயின் அரசியல் கட்சி மாநாட்டில் யார் யார்? பங்கேற்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட உள்ளது. அந்த வகையில் நேரம் இருந்தால் நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டில் பங்கேற்பேன் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். நடிகர் ஜீவாவும், விஜயும் நண்பன் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவருக்கும் நீண்ட கால பழக்கம் இருந்தாலும் கூட அவர்கள் 2012ம் ஆண்டில் தான் ஒன்றாக நடித்தனர்.
இந்நிலையில் தான் இயக்குநர் கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிகை பிரியா பவானி சங்கருடன் நடித்த பிளாக் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர் நடிகர் ஜீவா பங்கேற்று பேசினார். அதன்பிறகு நடிகர் ஜீவா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வேளையில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜயின் அரசியல் மாநாடு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது ‛‛சூப்பர் குட் ஃபிலிம்ஸில் விஜய்யை வைத்து தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்ததே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்பது நடிகர் ஜீவாவின் தந்தை நடத்தும் தயாரிப்பு நிறுவனம். அதனால் தான் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜீவா, ‛‛அது தெரியவில்லை, ஆனால் நாங்களே வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம். 69க்கு(69 வது திரைப்படம்) பிறகு என்ன பண்ண போறாருன்னு தெரியவில்லை. விஜய் தொடர்ந்து படம் பண்ணினால் அது நூறாவது படமாக அமைவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛நடிகர் விஜயின் மாநாட்டுக்கு சில கலைஞர்கள் செல்வதாக இருக்கிறது.. நீங்கள் போறீங்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் ஜீவா, ‛‛அப்படியா, அந்த மாதிரி நேரம் கிடைத்தால் போகிற மாதிரி இருக்கும்'' என்றார். இதன்மூலம் நேரமிருந்தால் நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications