திமுக கூட்டணி முடிச்சு லேசா அவுந்துச்சின்னா.. செதறிடும்.. பரபரப்பை கிளப்பும் ஜெயக்குமார்!
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளை இழுத்துப் பிடித்து கட்டி வைத்துள்ளார் ஸ்டாலின், லேசாக அவிழ்த்து விட்டால் சிதறிவிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பாக மகளிர் குழு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முழுவதும் கடைக்கோடி வரை அனைத்து இடங்களிலும் அதிமுக வலுவாக செயல்பட்டு வருவகிறது, தமிழகம் முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கும் மாபெரும் இயக்கம் அதிமுக என்று கூறினார்.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், "ஏற்கனவே அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை எப்போதும் கூட்டணி இல்லை. ஒரு தெளிவான முடிவை எடுத்தபிறகு திரும்பத் திரும்ப அதை கேட்கலாமா" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்பது உறுதி. திமுக இன்று ஆடிப்போய் இருக்கிறது. கூட்டணி கட்சிகளை திமுக இழுத்து கட்டி போட்டு வைத்திருக்கிறது. நெல்லிக்காய் மூட்டை போல திமுக கூட்டணியை ஸ்டாலின் கட்டி வைத்துள்ளார். அதை அவிழ்த்து விட்டால் அவ்வளவுதான்.. சிதறும்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் ஆளும் திமுக அரசு தமிழகத்தின் உரிமையை கேட்டுப் பெறுவதில் தோல்வி அடைந்துள்ளது. மகளிர் உரிமை மாநாட்டிற்கு சோனியா காந்தியை அழைத்த ஸ்டாலின் ஏன் காவிரி நீரை அவரிடம் பேசி தமிழகத்திற்கு பெற்றுத் தரவில்லை? பொதுமக்கள் வியாபாரிகள் என எந்த தரப்பினருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் குற்றவாளிகளும் திமுகவினரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். அதனால் தான் நாளுக்கு நாள் நொடிக்கு நொடி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது" எனக் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications