தனிமனித தாக்குதலில் ஈடுபட்டால்.. எடப்பாடியுடன் மோதிப் பாருங்கள்.. ஓபிஎஸை எச்சரிக்கும் ஜெயக்குமார்!
தனிக்கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியுடன் மோதிப் பாருங்கள் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: திமுகவிடம் அடகு வைக்க முயன்ற ஜீரோ ஓபிஎஸ்-யிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் உடனிருந்து தொல்லை கொடுக்கும் வியாதி போல் பல்வேறு துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ் என்றும், திறமையிருந்தால் தனிக்கட்சி தொடங்கி அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியுடன் மோதி பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதிமுக தோல்வி குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஓபிஎஸ் விமர்சனம்
அந்த அறிக்கையில், ஓர் இடைத் தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று விமர்சித்திருந்தார்.

ஜெயக்குமார் பதிலடி
அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பின், ஓபிஎஸை இணைக்கவில்லை என்றால் அதிமுகவின் தோல்வி தொடரும் என்று அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுகவின் தனித்தன்மையை சீர்குலைக்கவும் திமுகவிடம் அடகுவைக்கவும் ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்.

வேட்பாளரை நிறுத்த முடியாத ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியில் முறையாக ஒரு வேட்பாளரை நிறுத்த முடியாத காகித புலி. இதுவரை ஓபிஎஸ் பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொன்னதில்லை. இவர் செய்த பல்வேறு துரோகங்களை பெரிதுபடுத்தாமல் இந்த இயக்கத்தை கட்டிக் காக்கும் தியாக வேள்வியில் ஈடுபட்டு வருகிறார்.

தனிக்கட்சி
தகுதி, திறமை இருந்தால் தனிக்கடை துவங்கி எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல் ரீதியாக மோதி பார்க்கட்டும். அதைவிடுத்து, தனி மனித தாக்குதலில் ஈடுபட்டல் கைகட்டி வேடிக்கை பார்க்க உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன். உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதி போல், பல்வேறு துரோகச் செயல்களில் ஈடுபட்டதையும் பொறுத்துக்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.

சுயநலவாதி
இந்த திருந்துவார் என்று காத்திருந்த நிலையில், தன் மகனை, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வைத்து, பாராட்டுப் பத்திரம் படிக்க வைத்தார். தீய சக்தி திமுக எதிர்ப்பு என்ற நமது தொப்புள் கொடி கொள்கையை சீர்குலைக்க, இந்த சுயநலவாதி முயன்றதை உணர்ந்ததால்தான் ஒட்டுமொத்த இயக்கமும் கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணிவகுத்து நின்றது.
வெறும் நான்கு பேருடன், வாயை வாடகைக்கு விடும் ஒருசிலரை மட்டுமே வைத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமியின் தனித் தன்மையை சீர்குலைக்க முயன்ற இவர், தன் நிலை அறியாமல், தன்னை மறந்து புத்தி தடுமாறி தாறுமாறாக உளறி வருகிறார்.

ஆற்றாமையில் ஓபிஎஸ்
நடந்து முடிந்த ஈரோடு தொகுதிக்கான இடைத் தேர்தலில், ஆளும் கட்சி ரூபாய் 360 கோடியைக் கொட்டி, மக்களை பட்டியில் அடைத்து நம்மிடமிருந்து தட்டிப் பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டாடுவது வெட்கக்கேடு. நாம் நடத்திய புனித வேள்வியில், தர்மம் காக்க உண்மைத் தொண்டர்களின் துணையுடன் எடப்பாடி பழனிசாமி மீது அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்ததுதான் உண்மையான வெற்றி. இந்த இடைத் தேர்தலில் கழகத்திற்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்ற தனது எண்ணத்தில் மண்விழுந்த ஆத்திரத்திலும், தன் அரசியல் வாழ்வு இப்படி சூனியமாகிபோய்விட்டதே என்ற ஆற்றாமையிலும் பித்துக்குளிபோல் உளறத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications