Project Rebirth : விமானம் கீழே விழுந்தால்.. இனி நொறுங்காது.. தாயின் கனவுக்காக உருவான சூப்பர் திட்டம்
சென்னை: அஹமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த, ஏர் இந்தியா விமான விபத்தை போல், இன்னொரு விமான விபத்து நடக்கவே கூடாது என்று நினைத்த என்ஜினியர்களான வசீம் மற்றும் தர்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஒரு புதிய விமானப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளார் இந்த அமைப்பின் பெயர் தான் 'ப்ராஜெக்ட் ரீபர்த்' (Project REBIRTH). விபத்துக்களின் போது பயணிகளின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை தயாரித்துள்ளார்கள். இந்த தொழில் நுட்பம் எப்படி வேலை செய்யும் என்று பார்ப்போம்.
கடந்த ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, இன்ஜின் செயல் இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்து வேதனை அடைந்த, இளம் என்ஜினியர்களான எஸ்ஹெல் வசீம் மற்றும் தர்ஷன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஒரு புதிய விமானப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்.

தாயின் கனவு
குறிப்பாக, வசீம்மின் தாயார் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் பயத்தை நினைத்து மனம் கலங்கி போனாராம். அதனால் இன்னொரு விமானம் இது போல கீழே விழுந்து நொறுங்க கூடாது என்று முடிவு செய்த வசீம் மற்றும் அவரது நண்பர் தர்ஷன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மொத்த விமானத்திற்கே ஏர்பேக் தரும் திட்டத்தை தயாரித்துள்ளனர். இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டத்தை அவர்கள் புகழ்பெற்ற 'ஜேம்ஸ் டைசன் விருது' போட்டிக்கு சமர்ப்பித்துள்ளனர். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்
Project Rebirth என்பது ஒரு புதிய, புரட்சிகரமான விமானப் பாதுகாப்புத் திட்டம் என்று சொல்லப்படுகிறது. இது விமான விபத்துக்களின் போது பயணிகளின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்கிறார்கள்.. இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI)-ஆல் இயக்கப்படும் அமைப்பு ஆகும். விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என AI உணரும் போது, தானாகவே சில பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாம். அதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்ப்போம்.
வெளிப்புற ஏர்பேக்குகள் (External Airbags)
விமானம் நடுவானில் செல்கிற போது அல்லது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்து தவிர்க்க முடியாதது எனத் தெரிந்தவுடன், விமானத்தின் வெளிப்பகுதியில், குறிப்பாக மூக்கு, வயிற்றுப் பகுதி மற்றும் வால் பகுதியில் பெரிய, பல அடுக்கு ஏர்பேக்குகள் மிக விரைவாக (2 விநாடிகளுக்குள்) விரிவடையும். இவை, விமானம் தரையில் மோதும்போது ஏற்படும் அதிர்ச்சியை உறிஞ்சி, ஒரு "பாதுகாப்பு கூடு" போல செயல்படுமாம்.
ஸ்மார்ட் திரவங்கள் (Smart Fluids)
பயணிகளின் இருக்கைகளுக்கு பின்னால் மற்றும் சுவர்களுக்குள் இருக்கும் சிறப்புத் திரவங்கள், மோதலின் போது திடீரென இறுகி, அதிர்வுகளை உள்வாங்கி பயணிகளைக் காயங்களிலிருந்து பாதுகாக்கும் என்று என்ஜினியர்கள் கூறுகிறார்கள்.
ரிவர்ஸ் த்ரஸ்ட் (Reverse Thrust)
அடுத்தாக விமானத்தின் இறங்கும் வேகத்தைக் குறைப்பதற்காக, இன்ஜின்களில் இருந்து ரிவர்ஸ் த்ரஸ்ட் அல்லது வாயு உந்துவிசைகள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் விமானம் மெதுவாக பலூன் போல் கீழே இறங்குவதால் மோதுவதால் ஏற்படும் பாதிப்பு குறையும். விபத்து ஆபத்து பெரிய அளவில் தடுக்கப்படுமாம்.

மீட்புக் கருவிகள் (Rescue Aids)
ஒரு விமானம் திடீரென விபத்தில் சிக்கினால், விபத்துக்குப் பின் மீட்புக் குழுக்களுக்கு எளிதாக கண்டுபிடிக்க உதவும் வகையில், விமானத்தின் வெளிப்புறம் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் மாறிவிடுமாம். மேலும் GPS மற்றும் இன்ஃப்ரா-ரெட் பீங்கான்கள் போன்ற அம்சங்களும் இந்த ஏர்பேக்கில் இடம் பெறுமாம். இதன்மூலம் விமானம் எங்கே இருக்கிறது என்பதை மீட்பு குழு கண்டுபிடிக்க முடியுமாம்.
விமானம் பாதுகாப்பாக பயணிக்க உதவுமா?
Project Rebirth திட்டம், விபத்துக்கள் தவிர்க்க முடியாத சூழலில், பயணிகளின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும் என்ற நோக்கில் வடிவமைக்கப்படுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது விமான விபத்துக்களை தடுப்பதற்கான திட்டம் கிடையாது.. ஆனால் விபத்து நடந்தால், அதன் விளைவுகளைக் குறைத்து, உயிர் சேதங்களைத் தடுக்கும் ஒரு கடைசி நிலை பாதுகாப்பு அமைப்பு போல் செயல்படும் என்பதை இதனை கண்டுபிடித்த என்ஜினியர்கள் விளக்கி உள்ளார்கள்.
ஜேம்ஸ் டைசன் விருது
"Project Rebirth" தற்போது தான் கருத்தியல் ரீதியாகவும், சோதனை நிலையிலும் உள்ளது. இது பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டம், புகழ்பெற்ற ஜேம்ஸ் டைசன் விருது (James Dyson Award) போட்டியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கு ஒரு அங்கீகாரம் ஆக பார்க்கப்படுகிறது. விமானத்தின் பல்வேறு மோதல் காட்சிகளைப் பயன்படுத்தி, கணினி உருவகப்படுத்துதல்கள் (Computer Simulations) நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சோதனைகளில், இந்த அமைப்பு அதிர்ச்சியைக் கணிசமாக (60% வரை) குறைப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆய்வுகள் தேவை
Project Rebirth திட்டத்தை உண்மையான விமானங்களில் சோதிப்பதற்கு, மேலும் ஒரு முழுமையான ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருக்கிறது. இதற்காக, இதனை கண்டுபிடித்த இளம் என்ஜினியர்கள், பிரபலமான விமான ஆய்வகங்களுடன் இணைந்து "க்ராஷ் ஸ்லெட்" (crash sled) மற்றும் காற்றுச் சுரங்க (wind tunnel) சோதனைகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். காற்றுச் சுரங்க டெஸ்ட் என்பது ஒரு பொருளின் மீது காற்று எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறியும் வகையிலான சோதனை என்று சொல்கிறார்கள். விமானங்கள் மீது காற்றின் தாக்கம், வேகம், அழுத்தம் மற்றும் உந்துவிசைகளை அளவிடப் பயன்படும் அதாவது விமானத்தின் இறக்கைகளின் வடிவம் காற்றுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால் இந்த சோதனை இந்த திட்டத்தை செயல்படுத்த அவசியம் ஆகும்.
பல ஆண்டுகள் ஆகும்
சரி இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்கிறீர்களா.. இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம். தற்போதைய நிலையில் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளது. ஆனால் நம்பிக்கை அளிக்கும் திட்டமாக இருக்கிறது. கார்களில் எப்படி ஏர்பேக் வேலை செய்கிறதோ, அதுபோல் Project Rebirth வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், விமானப் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications