2 வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றால்.. வெற்றி எப்படி முடிவு செய்யப்படும்?
சென்னை: தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் போது ஒரே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2 பேர் சம அளவிலான வாக்குகள் பெற்றால் வெற்றி எப்படி முடிவு செய்யப்படும்? யார் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்? என்ற சந்தேகம் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்காளர்களுக்கு ஏற்பட்டு இருக்கும்..
அரிதாக சில நேரங்களில் இப்படியான நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் வெற்றியாளர் எப்படி அறிவிக்கப்படுவார்கள் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்..

2 வேட்பாளர்கள் ஒரே வாக்குகளை பெற்றால்..
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற மக்கள் தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமே எதிர்பார்த்து உள்ளது. இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணிக்கு எண்ணும் பணி துவங்கும்.
8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்குப்பதிவு வாக்காளர்களின் எண்ணிக்கை ஏற்ப சுற்றுகள் வாரியாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் சம அளவிலான வாக்குகளை இரண்டு வேட்பாளர்கள் பெற்றால் என்ன ஆகும்? என வாக்காளருக்கு சில நேரம் சந்தேகம் ஏற்பட்டு இருக்கும்.
குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாக சில நேரங்களில் நடக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் வெற்றியை எப்படி தீர்மானிப்பார்கள் தெரியுமா?.. ஒரே தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றால், மக்கள் பிரதிநித்துவ சட்டம் 102-ன் கீழ் வெற்றியாளரை தீர்மானிக்க குலுக்கல் நடைபெறும். இந்த குலுக்கல் நடத்தும் முன்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) மீண்டும் ஒருமுறை வாக்கு எண்ணிக்கையை நடத்துவார்.
இதிலும் வாக்குகள் சமமாக இருவருக்கும் கிடைப்பது உறுதியானால் குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் யாருக்கு சாதகமாக சீட் கிடைக்கிறதோ.. அவர்கள் கூடுதலாக ஒரு வாக்க்கு பெற்றதாக கருதப்படுவார்கள். இதன் அடிப்படையில், வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். இந்த குலுக்கல் முறை தவறானது இல்லை என்று நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வு நடந்து இருக்கிறதா?
ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லை எனவும் ஒரே அளவான வாக்குகள் கிடைத்தால் குலுக்கல் என்பது சரியன தீர்வுதான் என்று சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்ற குலுக்கல் முறை நடைபெற்று இருக்கிறதா? என்றால் ஆம் என்பதே பதிலாகும்.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் அதுல்ஷா என்பவர் இந்த குலுக்கல் முறையில் வெற்றி பெற்று இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு அசாமில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 6 வெவ்வேறு இடங்களில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களின் வெற்றி, இந்த அதிர்ஷ்ட குலுக்கல் அடிப்படையில்தான் முடிவு செய்யப்பட்டது.
3 வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்கு பெற்றால்..
காயின் டாஸ் அல்லது குலுக்கல் என ஏதாவது ஒருமுறைகளில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சரி இரண்டு வேட்பாளர்கள் என்றால் இந்த முறை ஒகே.. 3 வேட்பாளர்கள் சம அளவிலான வாக்குகள் பெற்றால் என்ன ஆகும் என்று நினைக்கலாம். இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றாலும் அப்போதும் இதே நடைமுறையே பின்பற்றப்படும் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் உள்ளாட்சி தேர்தல்களில்தான் இப்படியான குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.














Click it and Unblock the Notifications