'அமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிடுங்க'..எடப்பாடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த துரைமுருகன்
சென்னை: எடப்பாடி பழனிசாமி சொல்வது சரி என்றால் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் என அவை முன்னவரான துரைமுருகன் நேற்று சட்டசபையில் கூறினார். ஏன் அப்படி சொன்னார் என்பதை பார்ப்போம்.
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றி குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 240 ஆரம்ப சுகாதார மையம் திறக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "டாக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தன என்பது உண்மைதான்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் 1,021 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. மேலும் 1,251 டாக்டர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 864 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 977 செவிலியர்களுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இனி வரவுள்ள காலியிடங்களுக்கும் சேர்த்து ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
மருந்தாளுனர் பணியிடங்கள் 986, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 1,066, கிராம சுகாதார செவிலியர்கள் 2,250 ஆகியவற்றுக்கு எம்.ஆர்.பி. தேர்வுகள் முடிக்கப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் 15 நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. எனவே காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சொல்வது உண்மை இல்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த 4 ஆண்டு காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. இந்த ஆட்சியில், மத்திய அரசிடம் கேட்டு 25 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்று திட்டம் தீட்டினார். தங்கள் ஆட்சியில் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் கூறும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான திட்டம் அது. அவற்றுக்கு இந்த ஆட்சியில்தான் ரூ.400 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 9 இடங்களில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாகை மற்றும் உதகமண்டலம் ஆகிய 2 இடங்களில் மருத்துவமனை கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இதனிடையே சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் "நான் நேற்று இந்த அவையில், அதிமுக ஆட்சி காலத்தில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டதாக தெரிவித்தேன். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீங்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் இது தவறான தகவல். நான் முதல்வராக இருந்த 2017-2021 காலக்கட்டத்தில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை என்னிடம் உள்ளது. எனவே, அவரது கருத்தை திரும்பப் பெறவேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எதிர்க்கட்சி தலைவர் முதல்-அமைச்சராக இருந்த 4 ஆண்டு காலத்தில் ஏதாவது புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க அரசாணை வெளியிடபட்டதா?. அவர் சொல்வது அதற்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணை." என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "11-12-2017 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியாகியது. அப்போது நான்தான் முதல்வராக இருந்தேன். அதேபோல், 20-1-2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போதும் நான் தான் முதல்வர். எனவே, அமைச்சர் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "எதிர்க்கட்சி தலைவர் கூறுவது சரி என்றால், அமைச்சர் பேசியதை நீக்கிவிடுங்கள்" என்று சபாநாயகரிடம் கூறினார். சபாநாயகர் அப்பாவும், "நான் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.இப்படியாக விவாதங்கள் நடந்தது.












Click it and Unblock the Notifications