"உழைப்பு-விசுவாசம்" அதிமுகவில் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன்..ட்விட்டர் ஸ்பேசில் இபிஎஸ் ஓபன் டாக்
சென்னை: என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு தடைகளை அரசியல் ரீதியாக நான் சந்தித்து இருக்கிறேன். எந்த ஒரு தொண்டனும் கடினமாக உழைத்தால் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் அதிமுகவில் படிப்படியாக பதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். உழைப்பு மற்றும் விசுவாசத்தால் தொண்டனாக தொடங்கி படிப்படியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக ஐடிவிங் நிர்வாகிகள் ஏற்பாடு செய்த ட்விட்டர் ஸ்பேசில் பங்கேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
1974 ஆம் ஆண்டு அதிமுக கிளைச்செயலளராக அரசியல் பயணத்தை தொடங்கினேன். பிறகு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறேன். தொண்டனாக தொடங்கி படிப்படியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன்.

கடினமாக உழைத்தால்..
என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு தடைகளை அரசியல் ரீதியாக நான் சந்தித்து இருக்கிறேன். எந்த ஒரு தொண்டனும் கடினமாக உழைத்தால் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் அதிமுகவில் படிப்படியாக பதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஜனநாயக அமைப்புள்ள ஒரு இயக்கம் என்றால் அது அதிமுகதான்.

உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும்
அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அந்த சோதனைகளை வென்றெடுத்து பெரிய சாதனைப் படைத்தார்கள். மிகப்பெரிய சாதனை படைத்தது மட்டும் இல்லை. அவருடை ஆட்சி காலம் பொற்காலம்.

தலைவர்கள் மறைவுக்கு பிறகு
இரு பெரும் தலைவர்கள் மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி சிக்கல்கள் தோன்றின. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மயை நிரூபிக்க ஆளுநர் உத்தரவின் பேரில் சட்டமன்றத்தை கூட்டப்பட்டது. சட்டமன்றம் நடந்த போது சட்டமன்றமே அலங்கோலமாக காணப்பட்டது.

நீதிமன்றம் மூலம்
மு.க ஸ்டாலின் எப்படியெல்லாம் சடமன்றத்தில் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்தார். அதையெல்லாம் தாண்டி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை காப்பாற்றினோம். இன்றைக்கு சில பேர் நீதிமன்றம் மூலம் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள்.

பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும்
அவர்களால் அதிமுகவில் எவ்வளவு கடுமையான உள்கட்சி பிரச்சினை என்பதை மக்கள் அறிவார்கள். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது கடுமையான சவால்கள் இருந்தன. வறட்சியை சமாளித்து தங்கு தடையின்றி சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கினோம். பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் நல்ல ஆட்சியை நாட்டு மகக்ளுக்கு வழங்கினோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications