இலவச கல்வி திட்டத்தில் பட்டப்படிப்பு படிக்க ஆசையா.. சென்னை பல்கலைக்கழகம் சூப்பர் அறிவிப்பு
சென்னை: ஏழை மாணவ மாணவியர், இலவச கல்வி திட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர நாளை (ஜூலை 22) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஏழை மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள திட்டம் தான் இலவச கல்வி திட்டம். இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியருப்பதாவது: "ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் நடைமுறையில் உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம்
நடப்பு கல்வி ஆண்டில் (2020-21) இந்த இலவச கல்வி திட்டத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியுள்ள மாணவர்ககள் விண்ணப்பிக்கலாம்.

வருமானம் எப்படி
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல்தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர் அல்லது மாணவியரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

நாளை முதல் விண்ணப்பம்
இந்த இலவச கல்வி திட்டத்துக்கான விண்ணப்பத்தையும் இதர விவரங்களையும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) ஜூலை22 (புதன்கிழமை) முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இணையதளத்தில் தேவையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்." இவ்வாறு சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும்
சென்னை பல்கலைக்கழகம் மட்டுமல்ல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்லைக்கழங்களிலும், அதற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இலவச கல்வி திட்டத்தின்கீழ் இளங்கலை படிப்புகளில் சேர முடியும் . அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டும் வருகின்றன. எனவே மாணவர்கள் அந்தந்த பல்கலைக்கழங்களில் இணையதளங்களில் இதற்கான விவரஙகளை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications