ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000! ஆசைகாட்டி மோசம் செய்த தமிழகத்தின் பிரபல நிதி நிறுவனம்!
சென்னை: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000 வட்டி தருவோம் என பொதுமக்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்த நிதி நிறுவனத்துக்கு ஆப்பு வைத்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஏமாற்றுப் பேர்வழி நிதி நிறுவனத்தை நம்பி 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் பணம் கட்டியிருப்பது தான்.
பண மோசடியில் ஈடுபட்ட ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்துக்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி ஆய்வு நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய நிறுவனம் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவனத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், என தமிழகம் முழுவதும் குறிப்பாக வட ஆற்காடு மாவட்டங்களில் பல கிளைகள் உள்ளன. தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை வட்டி தருவோம் என பொதுமக்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறி விளம்பரம் செய்திருக்கிறது ஐ.எப்.எஸ். நிறுவனம்.

மாதம் ரூ.8,000 வட்டி
பொதுமக்கள் பலரும் இதனை நம்பி மாதம் ரூ.8,000 வட்டி கிடைக்கிறதே என்ற ஆவலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கின்றனர். விளம்பரத்தில் கூறியபடி முதல் 2 மாதங்கள் மட்டும் முறையாக வட்டிப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது மாதம் முதல் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தங்களுக்கு வட்டியும், முதலும் கிடைக்காததை கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த தொடங்கியது.

ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம்
அப்போது தான் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணம் கட்டி ஏமாந்திருப்பது தெரிய வந்தது. ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முக்கிய ஏஜெண்ட்கள்
அதேபோல் பொதுமக்களிடம் பணம் வசூலிக்க மூளைச் சலவை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டிருந்த முக்கிய ஏஜெண்ட்களான சுகுமார், மின்மினி சரவணன் ஆகியோரது சென்னை வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தியிருக்கிறது. கட்டுக்கட்டாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் விசாரணை இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications