தங்கக் குடத்துக்கு பொட்டு வைக்கும் தமிழக அரசு.. இளையராஜாவுக்கு பாராட்டு விழா! திரளும் பிரபலங்கள்!
சென்னை: திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வரும் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பயணத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு இன்று பாராட்டு விழா நடக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் கட்சியினர், இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பூத்த இசைப் பூவான இளையராஜா இன்று உலகம் போற்றும் இசைக் கலைஞராகத் திகழ்கிறார். பண்ணைபுரத்தில் சின்னத்தாய் பெற்றெடுத்த 'இசை முத்து' பாவலர் வரதராஜனால் பட்டை தீட்டப்பட்டார்.
கம்யூனிஸ்டு மேடைகளில் ஒலித்த இந்த இசைக் குயில் அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகில் வெற்றிச் சிறகு விரித்துப் பறந்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இளையராஜாவின் ஹார்மோனியத்திலிருந்து அனைத்து மொழிகளுக்கும் இசை பிறந்திருக்கிறது.

50 ஆண்டு இசை
50 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இளையராஜாவின் விரல் வழியே பிரசவிக்கப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் என்றதோடு நின்றுவிடாமல் பாடகர், பாடலாசிரியர் என அவரது பரிணாமம் திரையுலகில் மிகப்பெரியது. இவ்வளவு சாதனைகளைச் செய்துவிட்ட போதும் ஓயாத அவரது விரல்கள் சிம்பொனி எழுதிச் சாதித்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகழ்பெற்ற லண்டன் ஈவென்டின் அப்போலோ அரங்கத்தில் வாலின் எனப் பெயரிடப்பட்ட இளையராஜாவின் சிம்பொனியின் அரங்கேற்றம் நடைபெற்றது.
இளையராஜா
மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும், சிம்பொனி இசைக் கலைஞர்கள் வரிசையில் இணைந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகமும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்த நிலையில் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையிலும் அவரது சிம்பொனி இசைப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
சிம்போனி சிகரம் தொட்ட தமிழன்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'சிம்போனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த திரையிசை கலைஞர்களும் நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றமும் நடக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக உலகின் பிரபலமான இசைக் கலைஞர்கள் தமிழகம் வந்துள்ளனர்.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழக அரசின் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் அவர்களுக்கான அனுமதிச் சீட்டு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. அதனைக் காட்டி தோள்பட்டை பாஸினை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் அவருக்கான பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். இறுதியில் ஏற்புரை நிகழ்த்துகிறார் இளையராஜா. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் திரைப்படத்துறை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications