வாட்டும் வெப்ப அலைக்கு குட்பை! அடுத்த ஒரு வாரம் ஜில் கிளைமேட்! இந்திய வானிலை மையம் ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், வெப்ப அலை குறித்து இந்திய வானிலை மையம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பருவநிலை மாற்றம், மாறி வரும் சூழல் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதிலும் இந்தாண்டு கடந்த பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலம் மிகவும் வெப்பம் நிறைந்ததாகவே இருக்கும் என்றே ஆய்வாளர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர்.

வெப்பம்: மதிய நேரங்களில் வீட்டை விட்டுக் கூட வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் உள்ளது. இந்த அதீத வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் மாநிலத்தில் சற்று குறைந்தே உள்ளது. இருப்பினும், இன்னுமே மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.
அதிகபட்சமாகத் தமிழ்நாட்டின் ஈரோட்டில் 101.84 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், சேலம், தஞ்சை, திருச்சி எனப் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே வானிலை மையம் வரும் நாட்களில் வெப்பம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

வெப்ப அலை: இதனிடையே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு வெப்ப அலைகள் இருக்காது என வானிலை மையம் கூறியுள்ளது. சில காலமாக கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இது பெரிய நிம்மதியைத் தரும் செய்தியாகவே உள்ளது. வெள்ளிக்கிழமை முதல் வடமேற்கு பிராந்தியத்தில் ஒரு புதிய ஈரமான வானிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில், ஏப்ரல்-ஜூன் மாதங்களில் வடமேற்கு இந்தியாவைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை 36-39 டிகிரி செல்சியஸாகவும், நாட்டின் பிற பகுதிகளில் 30-35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது. இமயமலைப் பகுதியில் கூட 15-25 டிகிரி வரை பதிவாகியுள்ளது.
வெப்ப அலை இருக்காது: இந்தச் சூழலில் அடுத்த ஏழு நாட்களுக்கு நாட்டில் வெப்ப அலைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு இமயமலைப் பகுதியில் புதன்கிழமை முதல் வடமேற்கு சமவெளிப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தெற்கு மத்தியப் பிரதேசத்தில் செவ்வாய் முதல் வியாழன் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது. அதேபோல தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் அடுத்த 3-4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில காலமாகவே வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், இப்போது வெயில் தணிந்துள்ளது பொதுமக்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications