திருமூர்த்தியை ஞாபகமிருக்கா! இப்போ தர்ஷினி.. இமானை கவர்ந்த காந்தக்குரல்! அரசு பள்ளி மாணவிக்கு யோகம்
சென்னை: விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவிக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக இசையமைப்பாளர் இமான் உறுதியளித்துள்ளார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மிகவும் பிரபலம். அது போல் ஊதா கலரு ரிப்பன் பாடலும் இவர் இசையமைத்ததுதான். தற்போது வள்ளி மயில், மலை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் இமான் எப்போது யாரிடம் திறமை இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வார். அவர் இசையில் பெரும்பாலும் புது குரல்களை புகுத்த வேண்டும் என விரும்புவார். அதிலும் ஏழை எளியோரிடம் இருக்கும் திறமைகளை ஊக்குவிப்பதில் வல்லவர்.
அந்த வகையில்தான் கண்பார்வையற்ற திருமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை சமூகவலைதளங்களில் கேட்ட இமான் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். அது போல் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவி, தாய் குறித்து பாடிய பாடல் வைரலானது.
காந்தக் குரலால் பாடிய அந்த பாடல் இமானின் கவனத்திற்கு சென்றது. உடனே அந்த பாடலை தனது சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்த இமான், இந்த சிறுமியின் போன் எண்ணை யாராவது தாருங்கள் என கேட்டிருந்தார். இந்த நிலையில் அந்த மாணவி விழுப்புரம் மாவட்டம் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதை இமான் அறிந்தார்.
இதையடுத்து உடனடியாக தனக்கு கிடைத்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து சிறுமியை வெகுவாக பாராட்டினார். மேலும் தனது இசையில் அந்த சிறுமிக்கு வாய்ப்பு தருவதாகவும் கூறினாராம். இதுகுறித்து தர்ஷினி கூறுகையில், நான் 7ஆம் வகுப்பு படித்து வருகிறேன். விழுப்புரம் மாவட்டம் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். நான் பக்கத்து கிராமத்தில் படித்து வருகிறேன். அங்கு ஏரி வேலை செய்துகிட்டு இருந்தாங்க. நான் சும்மா பாட்டு பாட ஆரம்பித்தேன்.
அதை எல்லாரும் இன்ஸ்டாவில் போட்டுவிட்டார்கள். இதனால் நான் வைரலானேன். அப்பா பம்பை உடுக்கை அடிப்பார். எனக்கு 1ஆம் வகுப்பு முதலே பாட்டு பாடுவதில் ஆர்வம் அதிகரித்துவிட்டது. எனது குரலை இமான் சார் கேட்டுவிட்டு என் போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அப்பாதான் பேசினார்.

எனக்கு பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது என கூறினார். அந்த மாணவியின் குரல் காந்த குரல் போல் இருக்கிறது. அவர் கானா பாடல்களையும் பாடுகிறார். இமானிடம் இருந்து வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதியால் அவருடைய குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இமான் சமூக ஆர்வலரும் கூட! விருத்தாசலம் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்துள்ளார். இவரின் சேவையை மக்கள் பாராட்டி வருகிறார்கள். இறைவன் எனக்கு கொடுத்ததால் நான் இல்லாதவர்களுக்கு செய்கிறேன் என தன்னடக்கத்துடன் இமான் கூறினார். அந்த நிகழ்வில் நரிக்குறவர்கள் அளித்த பாசி மாலைகளை அணிந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications