ஓய்வூதியம்.. கருவூலம் முடிவு.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
சென்னை: அரசு ஊழியர் ஒருவரின் குடும்பத்திற்கு அனுப்பிய கடிதத்தில், தவறாக கணக்கிடப்பட்டு உங்கள் தந்தைக்கு 10 லட்சத்து 18 ஆயிரத்து 14 ரூபாயை கூடுதலாக வழங்கியுள்ளோம். எனவே, இந்த தொகையை உடனடியாக அரசு கணக்கில் திரும்ப செலுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தவறும்பட்சத்தில் போலீஸ் மூலம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கபபட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பார்ப்போம்.
அரசு ஊழியர்கள் சிலருக்கு அதிகப்படியான ஊதியம் வழங்கப்பட்டதாகவோ அல்லது ஓய்வூதியம் வழங்கப்பட்டுவிட்டதாகவோ சில நேரங்களில் கடிதம் கருவூலத்தில் இருந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி அதிக ஊதியம் அல்லது அதிக ஓய்வூதியம் வாங்கியவர்களிடம் திரும்ப வசூலிக்க கருவூல அதிகாரிகள் கடிதம் அனுப்புவார்கள். அப்படித்தான் திருவள்ளுர் மாவட்ட அரசு ஊழியர் ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதுபற்றிய வழக்கில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கோவிந்தசாமி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " நான் திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். என் தந்தை கே.ஏ.ஆறுமுகம், இடைநிலை ஆசிரியராக வேலை செய்து கடந்த 1998-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2020-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் தனது இறுதிகாலம் வரை ஓய்வூதியம் பெற்று வந்தார்.
இந்தநிலையில், கடந்த மே 7-ந்தேதி திருவள்ளூர் உதவி கருவூல அலுவலர் தியாகராஜன் எனக்கு ஒரு உத்தரவை அனுப்பி இருக்கிறார். அதில், தவறாக கணக்கிடப்பட்டு உங்கள் தந்தைக்கு 10 லட்சத்து 18 ஆயிரத்து 14 ரூபாயை கூடுதலாக வழங்கி இருக்கிறோம். எனவே, இந்த தொகையை உடனடியாக அரசு கணக்கில் திரும்ப செலுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தவறும்பட்சத்தில் போலீஸ் மூலம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கையுடன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு ஊழியர் இறந்த பின்னர் அவரது வாரிசுதாரர்களிடம் இவ்வாறு பணத்தை திருப்பிக் கேட்பது சட்டவிரோதம் ஆகும்.. நான் ஆசிரியராக வேலை செய்வதால், எனக்கு எதிராக கருவூல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. உதவி கருவூல அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி, 27 ஆண்டுகளாக மனுதாரர் தந்தை பெற்ற ஓய்வூதியத்தில் கூடுதல் தொகையை, அவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு கேட்பது தவறு. அதுமட்டுமல்லாமல் போலீஸ் பெயரை சொல்லி மிரட்டுவதும் மிகப்பெரிய தவறு என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன் , உதவி கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications