அதிமுக அடிமை கட்சியா? தொண்டரை தலைவராக்கியிருக்கோம்.. ஆனால் திமுக.. இன்பதுரை சொல்றதை கவனிச்சீங்களா
சென்னை: செந்தில் பாலாஜி அதிமுகவில் தானே ஊழல் செய்தார் என்று ஒருவர் கேட்கிறார். அதனால்தான் ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து இறக்கினார். நீங்கள் ஏன் அமைச்சர் பொறுப்பு கொடுத்தீர்கள். ஸ்டாலினே செந்தில் பாலாஜியை குற்றவாளி என்று சொன்னார் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறினார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து அது குறித்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் கருத்துக்கள் தமிழக அரசியலில் அனலாய் கொதித்துக் கொண்டு இருக்கிறது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நேற்று அதிமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்து இருந்தனர்.

தொடர்ந்து முதல்வரின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று அளித்த பேட்டியில் பதில் அளித்து இருந்தார்.
அதில், எடப்பாடி பழனிசாமி அமலாகக்கத்துறை அதிகாரி போல பேசுவதாகவும் தங்கமணி, வேலுமணி மீதான ரெய்டு நடவடிக்கைகளின்போது அவர்களுக்காக டெல்லி சென்று அமித் ஷா காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்தார் என்றும் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ் பாரதியை சாடியுள்ளார்.
இன்பதுரை அளித்த பேட்டியில் கூறியதாவது:- செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியா? தவறா? என்பதுதான் விஷயம். முதல்வர் குடும்பத்தோடு போய் பார்ப்பது குறித்துதானே எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதில் என்ன தவறு உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேட்டிக்கு பதில் கொடுக்கிறேன் என என்னென்னமோ பேசுகிறார்.
செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லையா...இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் வழக்கு. நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு மணி நேரத்தில் முதல்வர் போனதும் துள்ளிக் குதித்து வணக்கம் போடுகிறார். முதல்வர் என்ன இதயவியல் நிபுணரா? இவர் போய் சிகிச்சை கொடுத்ததும் எழுந்து விட்டாரா? இதையெல்லாம் மக்கள் கேட்கிறார்கள். இதற்குதான் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கிறேன் என ஏதோதோ பேசுகிறார் ஆர்.எஸ் பாரதி. 62 வருஷமா அரசியலில் இருப்பதாக ஆர்.எஸ் பாரதி சொல்கிறார். நீங்கள் அப்படியேதானே இருக்கிறீர்கள் அரசியலில். எடப்பாடி இப்போ வந்தவர் என்று சொல்கிறீர்கள். அப்படியே இருக்கட்டும். ஆனால் அவரை நாங்கள் எங்கே வைத்து இருக்கிறோம். தொண்டர்களுக்கு தலைமையை கொடுக்கும் இயக்கம் அதிமுக.
அண்ணா திமுக அடிமை என்று நீங்கள் (ஆர்.எஸ் பாரதி) சொல்லலாமா? எங்கள் கட்சியில் தொண்டரை அதிமுக பொதுச்செயலாளார ஆக்கிவிட்டோம். ஆனால், தாத்தா, மகன், பேரன் அனைவருக்கும் கொடியை பிடித்துக் கொண்டு செல்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போட்டு விடுவார்களாம். பிடிஆர் பழனிவேல்ராஜன் விஷயத்தில் வழக்கு போடுங்க..
நாங்களே அதற்கு காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். பிடிஆர் எங்கேயாவது அவரது குரல் இல்லை என்று சொல்லியிருக்கிறாரா. .வெட்டியும் ஒட்டியும் போட்டதாகத்தான் சொல்கிறார். அது குறித்து ஏன் விசாரணை கமிஷன் போடவில்லை. நீதிமன்றத்திற்கு வரட்டுமே.. உத்தரவை பெறலாமே.. செந்தில் பாலாஜி அதிமுகவில் தானே ஊழல் செய்தார் என்று ஒருவர் கேட்கிறார்.
அதனால்தான் ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து இறக்கினார். நீங்கள் ஏன் அமைச்சர் பொறுப்பு கொடுத்தீர்கள். ஸ்டாலினே செந்தில் பாலாஜியை குற்றவாளி என்று சொன்னார். அதிமுகவில் இருக்கும் போது குற்றவாளி.. திமுகவிற்கு வந்துவிட்டால் செந்தில் பாலாஜி நல்லவர் ஆகிவிடுவாரா.. மனித நேயத்தோடு நடந்து கொள்வது குறித்து திமுக பேசலாமா.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது இதையெல்லாம் நீங்கள் கடைபிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications