சென்னையில் 4 நாட்களில் அரசு விநியோகம் செய்த உணவுப் பொருட்கள் என்னென்ன? இதோ முழு விவரம்!
சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வரை சென்னையில் 58,000 கிலோ பால் பவுடரும், 9 லட்சத்து 67,000 குடிநீர் பாட்டில்களும் அரசு சார்பில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பிரட் பாக்கெட் எண்ணிக்கைகளை பொறுத்தவரை 2 லட்சத்து 65,000 என்றும் பிஸ்கட் பாக்கெட்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 38,175 எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த மேலும் விவரம் வருமாறு;

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான மழை பெய்தது. இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்ததால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல்,
பால் பவுடர் -58,222 கிலோ
குடிநீர் பாட்டில்கள் -9,67,000 எண்ணிக்கை
பிரட் பாக்கெட் -2,65,000 எண்ணிக்கை
பிஸ்கட் பாக்கெட் -10,38,175 எண்ணிக்கை என்ற அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி, பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications