தமிழகத்தில் 4 பேருக்கு ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி! புனே ஆய்வு மையத்திலிருந்து வந்த ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இணை நோய்க்கு சிகிச்சைக்கு வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்கள் 4 பேரும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஓமிக்ரான் BA.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு 'ஜேஎன் 1' எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில், நேற்று மட்டும் 412 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 4,50,09,660ஆக உயர்ந்துள்ளது. இதில், 98.81 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்களாவார்கள். நாடு முழுவதும் 4,054 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஜே.என். 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திருவள்ளூர், கோவை, திருச்சி மற்றும் மதுரையில் இணை நோய்க்கு சிகிச்சைக்கு சென்றவர்களை பரிசோதித்தபோது 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இது ஜே.என். 1 வகை கொரோனா வைரஸா என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே இவர்களின் மாதிரிகள் புனே உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி, 4 பேருக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஜே.என். 1 வகை கொரோனா பரவல் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications